தரங்க சதம்: போராடி தோற்றது இலங்கை அணி!

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான நான்காவது ஒரு நாள் போட்டியில் 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி தோல்வியை சந்தித்துள்ளது.
தென் ஆப்பிரிக்கா- இலங்கை அணிகளுக்கிடையேயான நான்காவது ஒரு நாள் போட்டி கேப்டவுனில் நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
துவக்க வீரரான ஆம்லாவை குமரா 1 ஓட்டத்தில் ஆரம்பத்திலே வெளியேற்றி தென் ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்தார். அடுத்து களமிறங்கிய டூபிலிசிஸ் ஆரம்பத்தில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இவருக்கு ஈடுகொடுத்த மற்றொரு துவக்க வீரர் டிகாக் அரைசதம் கடந்து 55 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இதற்கு அடுத்து வந்த டிவில்லியர்சுடன், டூபிலிசிஸ் இணைந்து வானவேடிக்கை நிகழ்த்தினார்.
இருவரும் இலங்கை அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். இதனால் டிவில்லியர்ஸ் அரைசதம் கடந்து 64 ஓட்டகங்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த டுமினி 20 ஓட்டம் எடுத்து வெளியேறினர்.
ஒரு புறம் தென் ஆப்பிரிக்கா அணியின் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபுறம் டூபிலிசிஸ் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை விட்டபாடில்லை. இறுதியில் சதம் கடந்து 185 ஓட்டங்கள் எடுத்த போது மடுசன்கா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
தென் ஆப்பிரிக்கா அணி இறுதியாக 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 367 ஓட்டங்கள் குவித்து இலங்கை அணிக்கு ஒரு கடினமான இலக்கை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
கடின இலக்கை விரட்டுவதற்கு துவக்க வீரர்களாக டிக்வெல்லா மற்றும் தரங்கா களமிறக்கப்பட்டனர். இருவரும் அதிரடி காட்ட, இலங்கை அணியின் ஓட்டம் மளமளவென உயர்ந்தது. இதனால் இலங்கை அணி 58 பந்தில் முதல் விக்கெட்டுக்கு 100 ஓட்டங்கள் எடுத்து விக்கெட் இழப்பின்றி அருமையாக ஆடி வந்தது.
139 ஓட்டங்கள் எடுத்த போது அரைசதம் கடந்த டிக்வெல்லா 58 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மெண்டிஸ் தன் பங்கிற்கு 29, வீரக்கொடி 58 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினர். இதனால் இலங்கை அணி வெற்றி பெறுவதற்கு அருமையான வாய்ப்புகள் இருந்தன.
இருப்பினும் அடுத்து வந்த வீரர்கள் சில்வா 5, குணரத்னே 38 ஓட்டங்கள் என வெளியேற இலங்கை அணி சற்றுத்தடுமாறியது. அடுத்து வந்த வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கங்களில் ஆட்டமிழக்க இதனால் இலங்கை அணி வெற்றி பெற வேண்டிய போட்டியில் 48.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 327 ஓட்டங்கள் எடுத்து 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக துவக்க வீரர் தரங்கா 90 பந்தில் 119 ஓட்டங்கள் குவித்து அசத்தினார். இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை தென் ஆப்பிரிக்கா அணி 4-0 என்ற கணக்கில் வென்று அசத்தியுள்ளது.
ஆட்ட நாயகனாக மைதானத்தில் வானவேடிக்கை நிகழ்த்திய டூபிலிசிசுக்கு வழங்கப்பட்டது. இப்போட்டியின் இறுதியில் டி 20 போட்டியில் எப்படி இருக்குமோ அது போன்று இருந்தது. பரபரப்பாக நடந்த இப்போட்டியில் இரு அணி வீரர்களும் வானவேடிக்கை நிகழ்த்தியதால், இது ஒரு நாள் போட்டியா, டி 20 போட்டியா என்று வர்ணையாளர்கள் வர்ணித்துள்ளனர்.
Related posts:
|
|