தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரில் இணைகிறார் இலங்கை முரளி!
Saturday, May 27th, 2017இந்தியாவின் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்படும் தமிழ்நாடு பிரிமீயர் ரி-ருவென்ரி லீக் தொடரில், இலங்கை அணியின் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் இணைந்துள்ளார்.
இந்த தொடரில் இடம்பெற்றுள்ள வி.பி. திருவள்ளூர் வீரன்ஸ் அணியின் ஆலோசகராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த வருடம் முதல்முறையாக நடத்தப்பட்ட இந்த தொடர், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதால் இந்த வருடம் ஜூலை மாதம் இந்த தொடரின் இரண்டாவது சீசனை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தங்களது அணிகளை வலுப்படுத்திக்கொள்ள அணிநிர்வாகிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் வி.பி. திருவள்ளூர் வீரன்ஸ் அணியின் உரிமையாளரும், முன்னாள் இந்திய அணி வீரரும், அணித் தேர்வாளருமான வி.பி. சந்திரசேகர் அணியின் ஆலோசகராக முரளிதரனை தெரிவுசெய்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “முரளிதரன் திருவள்ளூர் வீரன்ஸ் அணியின் ஆலோசகராக செயல்படுவார். முரளிதரனை ஆலோசகராக நியமிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் கனவு கண்டதும் கிடையாது. திட்டமிட்டதும் கிடையாது.
வீரர்களை வழிநடத்திச் செல்ல அனுபவமான வீரர் ஒருவர் எங்கள் அணிக்கு தேவைப்பட்டது. முத்தையா முரளிதரன் கிரிக்கெட்டில் அதிக திறனைப் பெற்றவர். அவர் இதை சரியாக செய்வார் என்று நாங்கள் நினைத்தோம். தொடர் முழுவதும் அவர் அணியுடன் இணைந்து இருப்பார் என்று எதிர்பார்க்கிறோம். ஒரு சர்வதேச கிரிக்கெட் ஜாம்பவான் மாநில லீக்கில் ஆலோசகராக ஒத்துக்கொள்வது சிறப்பானது” என கூறினார்.
Related posts:
|
|