தடை நீக்கம் இல்லை: அவுஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம்!

Wednesday, November 21st, 2018

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் ஸ்மித், வார்னர் ஆகியோர் மீதான தடையை நீக்கும் எண்ணம் இல்லை என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில், அவுஸ்திரேலிய வீரர் பேன்கிராஃப்ட் பந்தை சேதப்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டார். அதனைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் பேன்கிராஃப்ட் தனது தவறை ஒப்புக்கொண்டார்.

மேலும் இவ்விவகாரத்தில் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணைக் கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோரும் ஈடுபட்டிருந்ததாக தெரிய வந்ததைத் தொடர்ந்து, ஸ்மித் மற்றும் வார்னருக்கு தலா ஓர் ஆண்டும், பேன்கிராஃப்ட்டுக்கு 9 மாதமும் தடை விதிக்கப்பட்டது.

ஸ்மித் மற்றும் வார்னர் மீதான தடையானது அடுத்த ஆண்டு மார்ச் 29ஆம் திகதி வரை நீடிக்கும்.

அதனைத் தொடர்ந்து, கிரிக்கெட் வீரர்கள் சங்கம் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை குறைக்குமாறு வலியுறுத்தியது. ஆனால் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அதற்கு மறுத்துவிட்டது.

இதற்கிடையில் இங்கிலாந்தில் படுதோல்வி, பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை இழந்தது என தொடர் தோல்விகளை அவுஸ்திரேலிய அணி சந்தித்து வருகிறது. தென் ஆப்பிரிக்க அணியுடனான தொடரில் பெரிதாக சாதிக்கவில்லை.

இந்நிலையில் இந்திய அணியுடன் மூன்று டி20, நான்கு டெஸ்ட் போட்டிகள் என நீண்ட தொடரில் அவுஸ்திரேலியா விளையாட உள்ளது.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெற்றி பெற வேண்டும் என்றால், ஸ்மித்-வார்னர் மீதான தடையை தளர்த்தி அணியில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வார்னர், ஸ்மித் மீதான தடையை நீக்குவது குறித்து அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பரிசீலித்தது. இதுதொடர்பான முடிவு இந்த வாரம் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில், வார்னர் மற்றும் ஸ்மித் மீதான தண்டனையை குறைப்பதற்கும், தடையை நீக்குவதற்கும் வாய்ப்பில்லை என அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தற்போதைய அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைவர் எட்டிங்ஸ் கூறுகையில், ‘மூன்று வீரர்கள் மீதான தடையை நீக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடந்தது. ஏற்கனவே தங்கள் குற்றத்தை அவர்கள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் மீதான தடையை இப்போது நீக்கினால் அது அவர்களுக்கு கடும் மன அழுத்தத்தைக் கொடுக்கும். அதனால் அவர்களின் தடையை நீக்கும் எண்ணமில்லை’ என தெரிவித்துள்ளது.

Related posts: