டோனியுடன் ஆலோசனை: வெளிப்படையாக கூறிய கோஹ்லி

Saturday, June 17th, 2017

ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ண தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில், பங்களாதேஷ அணியை வீழ்த்துவதற்கு டோனியுடன் ஆலோசனை நடத்தியதாக இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி வெளிப்படையாக கூறியுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் பின் விராட் கோஹ்லி நிருபர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“கேதர் ஜாதவை பந்து வீச அழைத்த முடிவுக்கான மொத்த பாராட்டுக்களையும் நான் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. வெளிப்படையாக சொல்லவேண்டும் என்றால், நானும் டோனியும் சேர்ந்தே இந்த முடிவை எடுத்தோம். கேதர் ஜாதவ் உண்மையாக சிறப்பாக பந்து வீசினார். பாராட்டுக்கள் அவருக்குதான் போய் சேர வேண்டும். வலைப்பயிற்சியின் போது கேதர் ஜாதவ் அதிகம் பந்து வீசியது கிடையாது.

ஆனால், அவர் மிகச்சிறந்த வீரர், துடுப்பாட்ட வீரர்களுக்கு எங்கு பிரச்சினை என்பதை அவர் நன்கு அறிந்து இருப்பார். பந்து வீசும் போது ஒரு துடுப்பாட்ட வீரர் போல நினைப்பவராக நீங்கள் இருந்தால் நிச்சயமாக எந்த ஒரு பந்து வீச்சாளருக்கும் பலன் அளிப்பதாக இருக்கும்” என கூறினார்.

பங்களாதேஷ் அணி சார்பில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய தமிம் இக்பால் மற்றும் முஷ்பிகுர் ரஹிம் ஆகிய இரு முக்கிய விக்கெட்டுகளை கேதர் ஜாதவ் வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது

Related posts: