டேவிஸ் கிண்ண ஆசிய கடல்சூழ் மூன்றாம் பிரிவு இலங்கை உட்பட ஒன்பது நாடுகள் பங்கேற்பு!

டேவிஸ் கிண்ணத்திற்கான ஆசிய கடல்சூழ் (ஏஷியன் பெசிவிக்) பிராந்தியத்திற்கான மூன்றாம் பிரிவு டென்னிஸ் போட்டியை மிகுந்த சவாலுக்கு மத்தியில் இலங்கை எதிர்கொள்ளவுள்ளது.
ஒன்பது நாடுகள் இரண்டு குழுக்களில் பங்குபற்றும் இப் போட்டி இன்றுமுதல் எதிர்வரும் 22ஆம் திகதிவரை இலங்கை டென்னிஸ் சங்க கடினதரை அரங்குகளில் நடைபெறவுள்ளன. இப் போட்டியை முன்னிட்டு இலங்கை அணியில் ஹர்ஷன கொடமான்ன, ஷார்மல் திசாநாயக்க, யசித்த டி சில்வா, நிஷாங்கன் நடராஜா ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளதுடன் விளையாடாத அணித் தலைவராக முன்னாள் டேவிஸ் கிண்ண வீரர் ரொஹான் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
இரண்டு ஒற்றையர் போட்டிகளிலும் மாற்று ஒற்றையர் போட்டிகளிலும் ஹர்ஷன கொடமான்னவும் ஷார்மல் திசாநாயக்கவும் விளையாடவுள்ளதாக அணித் தலைவர் ரொஹான் டி சில்வா தெரிவித்தார். தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் போட்டிகளில் விளையாட வேண்டியுள்ளதால் இரட்டையருக்கான போட்டியில் விளையாட வுள்ளவர்களை அந்தந்த தினத்தில் தெரிவு செய்யவுள்ளதாக அவர் கூறினார்.
இலங்கை அணியைப் பொறுத்தமட்டில் 31 வயதான ஹர்ஷன கொடமான்ன பிரதான வீரராக இடம்பெறுகின்றார். அண்மையில் நடைபெற்ற சர்வதேச பியூச்சர் டென்னிஸ் போட்டிகளில் கால் இறுதிவரை முன்னேறி தனது ஆற்றலை வெளிப்படுத்தினார்.
சிரேஷ்ட வீரரும் இடது கை ஆட்டக்காரருமான இவர் 46 போட்டிகளில் விளையாடி 38இல் வெற்றிபெற்றுள்ளார். 24 இரட்டையர் போட்டிகளில் 9 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளார்.
அணியில் இடம்பெறும் மற்றைய முக்கிய வீரர் 21 வயதான ஷார்மல் திசாநாயக்க ஆவார். வலது கை ஆட்டக்காரரான இவர் 2014முதல் இலங்கை அணியில் விளையாடி வருகின்றார். அணியில் இடம்பெறும் மற்றொரு வீரரான யசித்த டி சில்வா (22 வயது) பெரும்பாலும் இரட்டையர் போட்டியில் விளையாட வாய்ப்புள்ளது.
கடந்த வருடம் டேவிஸ் கிண்ணப் போட்டியில் அறிமுகமான நிஷாங்கன் நடராஜா (21 வயது) உள்ளூர் போட்டிகளில் பெரு முன்னேற்றத்தை வெளிப்படுத்தி வருகின்றார். குழு நிலைப் போட்டிகள் நிறைவில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் நாடுகள் இறுதிச் சுற்றில் விளையாடும். முடிவில் முதலிரண்டு இடங்களைப் பெறும் நாடுகள் இரண்டாம் பிரிவுக்கு தரமுயர்த்தப்படும். மற்றைய குழுக்களில் கடைசி இரண்டு இடங்களை அடையும் அணிகளுக்கு இடையில் நடத்தப்படும் போட்டிகளில் தோல்வி அடையும் நாடுகள் நான்காம் பிரிவுக்கு தரமிறக்கப்படும்.
Related posts:
|
|