டி வில்லியர்ஸின் எதிர்காலம் சந்தேகத்தில் ?
Tuesday, January 17th, 2017தென்ஆப்பிரிக்காவின் முன்னணி துடுப்பாட்ட வீரர் ஏபி டிவில்லியர்ஸ், டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்து விட்டு தொடர்ந்தும் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் தன் கவனத்தை செலுத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏபி டிவில்லியர்ஸ் நீண்டகாலமாக முழங்கை உபாதையால் அவதிப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவர் 2016இன் நடுப்பகுதியிலிருந்தது போட்டிகளில் பங்கெடுக்கவில்லை. டெஸ்ட் அணித்தலைவர் பதவியிலிருந்து தானாக விலகிய நிலையில் அப்பதவியை தற்போது டு பிளெஸிஸ் வகிக்கிறார்.
இந்நிலையில், இவர் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பாரா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
இது குறித்து தற்போதைய அணித்தலைவர் டுபிளசி கூறுகையில், டிவில்லியர்ஸ் தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் விளையாட முடிவு செய்துள்ளது மகிழ்ச்சியான விஷயம்.அதேபோல அவர் எங்களுக்காக டெஸ்ட் போட்டிகளிலும் தொடர்ந்து பங்கேற்பார் என நம்புகிறேன்.
அவர் ஒரு உலகத்தரமான துடுப்பாட்ட வீரர், அவரைப்போன்ற வீரர் அணியில் இடம் பெற்று வெற்றியை தேடித்தர வேண்டும் என்றே ஒரு தலைவராக உணர்கிறேன் என்றார்.32 வயதான டிவில்லியர்ஸ் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு இலங்கையுடான 3வது டி20 போட்டியின் போது திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக தென்ஆப்பிரிக்காவின் பயிற்சியாளர் தெரிவிக்கையில் ” வில்லியர்ஸுடன் இணைந்து அவர் எதிர்காலத்தை திட்டம் இடவேண்டியுள்ளது” என தெரிவித்துள்ளார்.வில்லியர்ஸ் 12 வருடங்களுக்கு மேலாக டெஸ்ட் கிரிக்கெட் ஆடி 106 போட்டிகளில் 8074 ஓட்டங்களை குவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|