டிவில்லியர்ஸுக்கு இரண்டு மாதம் ஓய்வு!

ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தென்னாபிரிக்க அணியின் தலைவர் டிவில்லியர்ஸுக்கு முழங்கையில் ஏற்பட்டுள்ள காயத்துக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக அவர் 2 மாதங்கள் போட்டிகளில் இருந்து விலகி ஓய்வெடுக்க உள்ளதாகத் தெரிகிறது.
இதுகுறித்து, தென்னாபிரிக்க அணியின் மருத்துவர் முகமது மூசாஜி கூறியதாவது: டி வில்லியர்ஸின் இடது முழங்கையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக, செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட உடற்தகுதி சோதனையில் அவர் தேர்ச்சி பெற இயலவில்லை. முடநீக்கியல் நிபுணர்கள் தகுந்த சிகிச்சை அளித்ததைத் தொடர்ந்து அவர் விளையாடினார்.
எனினும், அவரால் முழுமையாக காயத்தின் வலியில் இருந்து மீள முடியவில்லை. எந்த முயற்சிகளும் பலன் தராததை அடுத்து, அவருக்கு அடுத்தவார ஆரம்பத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்வதென முடிவு செய்துள்ளோம்.
அதையடுத்து ஓய்வு எடுக்கும் டி வில்லியர்ஸ், கிறிஸ்மஸை ஒட்டி நடைபெறும் இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்பார். டி வில்லியர்ஸ் விலகல் காரணமாக, டூ பிளெஸ்ஸிஸை அணித்தலைவராக நியமிக்கலாம் எனத் தெரிகிறது என்று முகமது மூசாஜி கூறினார்.
Related posts:
|
|