ஜோஸ் பட்லரின் அதிரடி :மும்பையை பந்தாடியது ராஜஸ்தான்!

Monday, May 14th, 2018

ஜோஸ் பட்லரின் அதிரடி ஆட்டத்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மும்பையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

மும்பை இந்தியன்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 47-வது மற்றும் இன்றைய 2-வது ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நாணய சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சு தெரிவு செய்தது.

அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணியின் சூர்யகுமார் யாதவ், எவின் லெவிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

இதனால் ஓவருக்கு சராசரியாக 10 ஓட்டங்கள் வந்து கொண்டிருந்தது. பவர் பிளேயான முதல் 6 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 51 ஓட்டங்கள் குவித்தது.

அணியின் ஸ்கோர் 10.4 ஓவரில் 87 ஓட்டங்களாக இருக்கும்போது சூர்யகுமார் யாதவ் 31 பந்தில் 38 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அணித்தலைவர் ரோகித் சர்மா தான் சந்தித்த முதல் பந்திலேயே வெளியேறினார்.

மறுமுனையில் விளையாடிய எவின் லெவிஸ் 12-வது ஓவரின் கடைசி பந்தை சிக்சருக்கு தூக்கி 37 பந்தில் அரைசதம் அடித்தார்.

தொடர்ந்து விளையாடிய அவர் 42 பந்தில் 60 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் இஷான் கிஷான் 12 ஓட்டங்களில் ஏமாற்றம் அடைந்தார்.

இதனால் ரன் குவிக்கும் பொறுப்பு ஹர்திக் பாண்டியா தலையில் விழுந்தது. 5-வது விக்கெட்டுக்கு ஹர்திக் பாண்டியா உடன் குருணால் பாண்டியா ஜோடி சேர்ந்தார்.

குருணால் பாண்டியா 3 ரன் எடுத்த நிலையில் நடையை கட்டினார். மும்பை இந்தியன்ஸ் 18 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 136 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

19-வது ஓவரை உனத்கட் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் இமாலய சிக்ஸ் ஒன்றை விளாசினார் ஹர்திக் பாண்டியா.

அதோடு அடுத்த பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். 3-வது பந்தை சர்வசாதரணமாக ஆஃப் சைடு சிக்ஸ்க்கு தூக்கினார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 19 ஓட்டங்கள் கிடைத்தது.

கடைசி ஓவரை பென் ஸ்டோக்ஸ் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் பென் கட்டிங் சிக்ஸ் விளாசினார்.

3-வது பந்தை ஹர்திக் பாண்டியா பவுண்டரிக்கு விரட்டினார். ஐந்தாவது பந்தை தூக்கி அடித்தார். அதை சஞ்சு சாம்சன் பறந்து சென்று கேட்ச் பிடித்தார்.

ஹர்திக் பாண்டியா 21 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 36 ஓட்டங்கள் சேர்த்தார். கடைசி பந்தில் இரண்டு ரன்கள் சேர்க்க மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ஓட்டங்கள் சேர்த்தது.

இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 169 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ். ராஜஸ்தான் சார்பில் ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் தலா 2 விக்கெட்டும், தவால் குல்கர்னி, உனத்கட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 169 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷார்ட்டும், ஜோஸ் பட்லரும் இறங்கினர்.

ஷார்ட் 4 ஓட்டங்களில் அவுட்டானார். அடுத்து வந்த அணித்தலைவர் ரகானே பட்லருக்கு ஓரளவு கம்பெனி கொடுத்தார். இருவரும் இணைந்து 95 ஓட்டங்கள் சேர்த்தனர். ரகானே 37 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் ஜோஸ் பட்லர் தூணாக நின்று சிக்சர், பவுண்டரியுமாக விளாசி அரை சதம் கடந்தார். அவருக்கு சஞ்சு சாம்சன் ஈடுகொடுத்தார். சாம்சன் 26 ஓட்டங்களில் அவுட்டானார்.

இறுதியில், ராஜஸ்தான் அணி 18 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 169 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜோஸ் பட்லர் 53 பந்துகளில் 5 சிக்சர், 9 பவுண்டரியுடன் 94 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை அணி சார்பில் ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டும், பும்ரா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

Related posts: