ஜிம்பாப்வே அணி 2வது வெற்றி!

Saturday, March 12th, 2016

6வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் தற்போது, சூப்பர்10 சுற்றுக்குரிய இரு அணிகளை தேர்வு செய்வதற்கான முதல் சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன.

முதல் சுற்றில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் வங்காளதேசம், நெதர்லாந்து, அயர்லாந்து, ஓமன், ‘பி’ பிரிவில் ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான், ஹாங்காங் அணிகள் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் முடிவில் இரு பிரிவிலும் முதலிடத்தை பிடிக்கும் அணி, சூப்பர்–10 சுற்றை எட்டும்.

இந்த நிலையில் நாக்பூர் ஜம்தா மைதானத்தில் நடந்த 5–வது லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே–ஸ்காட்லாந்து அணிகள் மோதின. ‘முதலில் துடப்பெடுத்தாடிய ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்தின் பந்து வீச்சில் அதிரடி காட்ட முடியாமல், 5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 19 ரன்களுடன் தடுமாறியது. ஹாமில்டன் மசகட்சா (12 ரன்) கடந்த ஆட்டத்தை போலவே மீண்டும் ரன்–அவுட் ஆனார்.

இதன் பிறகு சீன் வில்லியம்சின் அரைசதம் (53 ரன், 36 பந்து, 6 பவுண்டரி) ஜிம்பாப்வேயை கவுரவமான ஸ்கோரை அடைய வழிவகுத்தது. 20 ஓவர்களில் அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் சேர்த்தது. சிகும்புரா தனது பங்குக்கு 20 ரன்கள் (17 பந்து) எடுத்தார்.

தொடர்ந்து களம் புகுந்த ஸ்காட்லாந்து அணி ஜிம்பாப்வேயின் பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 42 ரன்னுக்குள் 5 வீரர்களை (7.5 ஓவர்) இழந்தது. ஆனாலும் ஸ்காட்லாந்து வீரர்கள் மனம் தளரவில்லை. ரிச்சி பெரிங்டனும், பிரஸ்டன் மம்செனும் இணைந்து அணியை சரிவில் இருந்து ஓரளவு மீட்டனர். 6வது விக்கெட்டுக்கு இவர்கள் 51 ரன்கள் சேர்த்தனர். மம்சென் 31 ரன்களில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த சப்யான் ஷரிப் ஒரு ரன்னில் வெளியேறினாலும், 8வது விக்கெட்டுக்கு இறங்கிய ஜோஷ் டேவி சரவெடியாய் மிரட்டினார். கடைசி 3 ஓவர்களில் ஸ்காட்லாந்தின் வெற்றிக்கு 30 ரன்களே தேவைப்பட்டதால் பரபரப்பு உண்டானது.

ஆனால் ரிச்சி பெரிங்டன் 36 ரன்களிலும் (39 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்), ஜோஷ் டேவி 24 ரன்களிலும் (13 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் ஆக, அதன் பிறகே ஜிம்பாப்வே நிம்மதி பெருமூச்சு விட்டது. இறுதியில் ஸ்காட்லாந்து அணி 19.4 ஓவர்களில் 136 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. இதன் மூலம் ஜிம்பாப்வே 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் வெலிங்டன் மசகட்சா 4 விக்கெட்டுகளும், சதரா, திரிபனோ தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். 22 வயதான வெலிங்டன் மசகட்சா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இவர், கேப்டன் ஹாமில்டன் மசகட்சாவின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிம்பாப்வேக்கு இது 2–வது வெற்றியாகும். ஏற்கனவே ஹாங்காங்கை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது. அதே சமயம் 2–வது தோல்வியை தழுவிய ஸ்காட்லாந்து அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது. உலக கோப்பை போட்டிகளில் (50 ஓவர் மற்றும் 20 ஓவர் இரண்டும் சேர்த்து) ஸ்காட்லாந்து அணி தொடர்ந்து 19 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்து இருப்பது நினைவு கூரத்தக்கது.

இந்த ஆட்டத்திற்கு ரசிகர்கள் கூட்டம் இன்றி மைதானம் வெறிச்சோடி காணப்பட்டது. இதற்கு டிக்கெட் விற்பனையில் நடந்த குளறுபடியே காரணம் என்பது தெரிய வந்துள்ளது. ரூ.100, ரூ.200 வீதம் டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.ஆனால் நாக்பூரில் போட்டி நடந்த மைதானத்தில் டிக்கெட் விற்பனை செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக அங்குள்ள பழைய மைதானத்தில் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது. அங்கிருந்து டிக்கெட் வாங்கிக்கொண்டு இந்த மைதானத்திற்கு வந்து போட்டியை முழுமையாக பார்க்க முடியாது. ஏனெனில் அங்கிருந்து போட்டி நடைபெறும் மைதானத்திற்கு ஆட்டோவில் வர சுமார் 40 நிமிடங்கள் ஆகும். டிக்கெட்டுக்காக நீண்ட நேரம் அலைய வேண்டி இருந்ததால் போட்டியை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டவில்லை

Related posts: