சுழல் தாக்குதலுக்கு தயாராகும் இலங்கை
Saturday, March 26th, 2016இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி ஆடுகளம் எங்களுக்கு சாதகமாக அமையும் என்று இலங்கை வீரர் சந்திமால் தெரிவித்துள்ளார்.
இலங்கை- இங்கிலாந்து அணிகள் மோதும் உலகக்கிண்ண டி20 லீக் ஆட்டம் இன்று டெல்லியில் நடக்கிறது.
பிரிவு 1ல் இடம்பெற்றுள்ள இவ்விரு அணிகளில் இங்கிலாந்து 3 போட்டிகளில் 2 வெற்றி 1 தோல்வி என 4 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது.
அதேசமயம் இலங்கை அணி 2 போட்டிகளில் விளையாடி 1 வெற்றி 1 தோல்வி என 2 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது. மீதமுள்ள 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் இலங்கை உள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான இன்றையப் போட்டி பற்றி இலங்கை வீரர் சந்திமால் கூறுகையில், ”இலங்கை அணியில் நடுவரிசை தடுமாற்றத்துடன் இருப்பது கவலைக்குரிய விடயமாக உள்ளது.
இருப்பினும் எங்களுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. டெல்லி ஆடுகளம் மெதுவான தன்மை கொண்டது. இது எங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
ஓய்வு பெற்றவர்களின் இடத்தை இளம் வீரர்கள் இன்னும் நிரப்பவில்லை என்பதையே மோசமான ஆட்டத்துக்கு காரணமாக சொல்லிக் கொண்டிருக்க முடியாது.
இனிமேல் வீரர்கள் தங்களது முழு திறமையை வெளிப்படுத்த வேண்டியது அவசியம். கிடைத்த 6 நாட்கள் ஓய்வு பயனுள்ளதாக இருந்தது. இந்த நாட்களில் முந்தைய போட்டிகளில் செய்த தவறுகள் குறித்து அலசி ஆராய்ந்தோம்.
மேலும், ரங்கண ஹேரத் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர். அவர் எதிரணிக்கு எளிதில் அழிவை உண்டாக்கிவிடுவார். தென்ஆப்பிரிக்க அணி சுழலில் தடுமாறியது நன்றாக தெரிந்தது.
எங்கள் அணியில் சுழற்பந்துவீச்சாளர்கள் வந்தர்சே, சேனாநாயக்க சிறப்பாக உள்ளனர்.
ஹேரத்திடம் இருந்து அதிகமாக எதிர்பார்க்கிறோம். அவருக்கு நெருக்கடியை எப்படி சமாளிக்க முடியும் என்பது நன்றாக தெரியும்“ என்று தெரிவித்துள்ளார்
Related posts:
|
|