சீருடை கூட இல்லாமல் இந்தியா வந்தோம்: – சமி

Tuesday, April 5th, 2016

எதிர்மறை விடயங்கள் தான் டி20 உலகக்கிண்ண தொடரில் சாதிக்க பெரிதும் உதவியதாக மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் டேரன் சமி கூறியுள்ளார்.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த டி20 உலகக்கிண்ண இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை 4 விக்கெட்டுகளால் வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள் அணி 2வது முறையாக கிண்ணம் வென்றது.

இதன் பிறகு நடந்த பரிசளிப்பு விழாவில் பேசிய டேரன் சமி “நான் முதலில் கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் அணியில் பாதிரியாராக ஆந்த்ரே பிளெட்சர் இருக்கிறார். அவர் எப்போதுமே வேண்டுதல் நடத்திக் கொண்டே தான் இருந்தார்.

இந்த வெற்றி அதிக மகிழ்ச்சியளிக்கிறது. இந்த வெற்றியை நாங்கள் நீண்ட நாட்களுக்குக் கொண்டாடவே செய்வோம்.

நாங்கள் 15 மேட்ச் வின்னர்களை வைத்திருக்கிறோம் என்று கூறினேன். ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொருவர் பொறுப்பைச் சுமந்தனர்.

தனது அறிமுக உலகக்கிண்ணப் போட்டியிலே பிராத்வெய்ட் இப்படி ஆடுவது உண்மையில் ஆச்சர்யமளிக்கிறது.

எங்களுக்கு நிறைய பிரச்சனைகள் இருந்தன. இந்தத் தொடரில் நாங்கள் விளையாடுவோமா என்று பலரும் பேசினர். எங்கள் கிரிக்கெட் வாரியமே எங்களை மதிக்கவில்லை என்பதாகவே உணர்ந்தோம்.

மார்க் நிகலஸ் எங்கள் அணியை மூளையில்லாதவர்கள் என்று கேலி செய்தார். தொடருக்கு முன்பாக இத்தகைய விடயங்கள் எங்களை ஒருங்கிணைத்துக் கொள்ள உதவியது.

எவ்வளவோ எங்களைப் பற்றி பேசப்பட்டது. உண்மையில் இந்த 15 வீரர்களுக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எதிர்மறை விடயங்களை கடந்து இத்தகைய கிரிக்கெட் ஆட்டத்தை உணர்வு மிக்க ரசிகர்கள் முன்னிலையில் வெளிப்படுத்தியது அருமையிலும் அருமை.

மேலும், பயிற்சியாளர் பில் சிம்மன்ஸுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். புதிய மேலாளர் ரால் லூயிஸ், அவர் எங்களுக்காக பட்ட கஷ்டம் அதிகம்.

எங்களுக்கு சீருடை கூட இல்லை. எங்களுக்கு இந்த சீருடையைப் பெற்றுத்தர அவர் பட்டபாடு எங்களுக்கு தான் தெரியும், அவருக்கு எனது நன்றிகள்.

எங்களது இந்த வெற்றியை மேற்கிந்திய தீவுகள் ரசிகர்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறோம்.

கிரெனடாவிலிருந்து பிரதமர் கெய்த் மிட்செல் எங்களை உத்வேகப்படுத்த போட்டி தினத்தன்று மின்னஞ்சல் செய்தார்.

அவர் எங்களை தொடர்ந்து ஊக்குவித்து வந்தார், ஆனால் கிரிக்கெட் வாரியத்திடமிருந்து இன்னும் கூட வாழ்த்துச் செய்தி வரவில்லை, இது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.

இன்று நான், இந்த 15 வீரர்கள், பயிற்சியாளர்கள் ஆகியோருடன் இந்த பெரிய வெற்றியைக் கொண்டாட போகிறேன்.

மீண்டும் இவர்களுடன் நான் எப்போது ஆடுவேனா என்று தெரியவில்லை. எங்களை ஒருநாள் போட்டிகளுக்கு தேர்வு செய்ய மாட்டார்கள்.

மேற்கிந்திய தீவுகள் தான் சாம்பியன் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே” என்று கூறியுள்ளார்.

Related posts: