சாம்பியன் பட்டம் வென்ற ரபேல் நடால்!

Tuesday, May 22nd, 2018

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரபேல் நடால் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டிகள் ரோம் நகரில் நடைபெற்று வருகிறது. இறுதிச்சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில், உலகின் முன்னணி வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால் மற்றும் ஜேர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வேரேவ் ஆகியோர் மோதினர்.

விறுவிறுப்பான நடைபெற்ற இந்த ஆட்டத்தில், ரபேல் நடால் முதல் செட்டை 6-1 என்ற கணக்கில் கைப்பற்றினார். தொடர்ந்து நடந்த இரண்டாவது செட்டை ஸ்வரேவ் 6-1 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

இருவரும் சமநிலை பெற்றதால் ஆட்டத்தில் விறுவிறுப்பு அதிகரித்தது. இந்நிலையில், இறுதி செட்டை ரபேல் நடால் 6-3 என்ற செட் கணக்கில் கைப்பற்றி அபார வெற்றி பெற்றார்.

இதன்மூலம், சாம்பியன் பட்டத்தை அவர் தட்டிச் சென்றார். உலக தரவரிசையில் ரபேல் நடால் 2வது இடத்திலும், அவரிடம் தோல்வியடைந்த அலெக்சாண்டர் ஸ்வேரேவ் 3வது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.