சாமுவேல்ஸுக்கு மரியாதை தெரியாது!

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சகலதுறை வீரர் மார்லன் சாமுவேல்ஸ், மரியாதை தெரியாத ஒருவர் என, இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
2015ஆம் ஆண்டு இடம்பெற்ற டெஸ்ட் போட்டியொன்றில், இருவருக்குமிடையிலான வாய்த்தர்க்கம் இடம்பெற்றதோடு, அதன் போது சாமுவேல்ஸ் ஆட்டமிழந்த பின்னர், அவருக்கு சல்யூட் தெரிவித்து, ஸ்டோக்ஸ் விடை வழங்கியிருந்தார்.
பின்னர், இவ்வாண்டு இடம்பெற்ற உலக இருபதுக்கு-20 தொடரின் இறுதிப் போட்டியில் இருவரும் வாய்த்தர்க்கம் புரிந்திருந்தனர். ஆனால், அப்போட்டியில் 85 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்ற சாமுவேல்ஸ், போட்டியின் நாயகன் விருதை வென்றார். ஸ்டோக்ஸ் வீசிய இறுதி ஓவரில், கார்லொஸ் பிறெக்வெய்ட், தொடர்ச்சியாக 4 ஆறு ஓட்டங்களை அடித்திருந்தார்.
அப்போட்டியின் முடிவில் கருத்துத் தெரிவித்திருந்த சாமுவேல்ஸ், “ஸ்டோக்ஸ், பதற்றம்மிகுந்த ஒருவர். அவர் பாடங்களைக் கற்றுக் கொள்வதில்லை” என்று தெரிவித்திருந்தார்.
எனினும், தற்போது தனது சுயசரிதை ஒன்றை வெளியிட்டுள்ள ஸ்டோக்ஸ், “மார்லன் சாமுவேல்ஸுக்கு மரியாதை தெரியாது. கிரிக்கெட் மைதானத்தில் அவருடன் நேரத்தைச் செலுத்தியிருந்தால், அதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். உலக இருபதுக்கு – 20 இறுதிப் போட்டியில் எங்களுக்கெதிராக வென்றுவிட்டு, அவர் நடந்துகொண்ட விதம், விளையாட்டு மீது அதிகபட்ச மரியாதையின்மையை வெளிப்படுத்தியது. துடுப்பாட்டக் கால்தடுப்புகளைக் கழற்றாமல், ஊடகச் சந்திப்புக்கு மார்லன் வந்தார். அங்கு அமர்ந்து, மேசை மீது காலை வைத்துக் கொண்டிருந்தார். மரியாதை தெரியாத முறை அது” என்று தெரிவித்தார்.
Related posts:
|
|