சவுதி அரேபியாவின் அல் நஸர் கால்பந்து கிளப் சீருடையில் ரசிகர்கள் முன்பு தோன்றிய ரொனால்டோ!

Wednesday, January 4th, 2023

நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி அரேபியா கிளப் ஒன்றில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச கால்பந்து விளையாட்டில் முன்னணி வீரராக வலம்வருபவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. தனது கால்பந்து பயணத்தை இங்கிலாந்தின் புகழ்பெற்ற மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியை அடித்தளமாகக் கொண்டுதான் தொடங்கினார்.

ரொனால்டோ மான்செஸ்டர் அணியில் இணைந்த பின்னே அவரின் திறமைகள் உலகுக்குத் தெரியவந்தன. 2003-2009ஆம் ஆண்டு வரை மான்செஸ்டர் அணியிலிருந்த ரொனால்டோ 2009ஆம் ஆண்டுக்குப் பின் ஸ்பெயின் கிளப்பான ரியல் மாட்ரிட் அணியில் இணைந்தார்.

சுமார் 90 மில்லியன் யூரோக்கள் கொடுத்து ரியல் மாட்ரிட் அணி அவரை வாங்கியது. அதுவரைக்கும் எந்த ஒரு வீரரும் அந்த விலைக்கு வாங்கப்படாததால் உலகின் விலையுயர்ந்த கால்பந்து வீரராக ரொனால்டோ பார்க்கப்பட்டார்.

பின் பல வருடங்கள் கழித்து 2021ஆம் ஆண்டு மீண்டும் மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியிலேயே இணைந்தார். ஆனால் இணைந்த ஓராண்டிலேயே கிளப் நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த நவம்பர் மாதம் மான்செஸ்டர் யுனைடெட் கிளப்பிலிருந்து வெளியேறினார் ரொனால்டோ.

இந்நிலையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி அரேபியாவின் அல் நஸர் (AI Nassar) என்ற கிளப் அணியில் இணைந்து விளையாட இரண்டரை வருடங்களுக்குப் புதிய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். வருடத்துக்கு 177 மில்லியன் யூரோ சம்பளத்துக்கு ரொனால்டோவை அல் நஸர் கிளப் ஒப்பந்தம் செய்துள்ளது.

அல் நஸர் அணியில் ரொனால்டோவை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தும் விழா, சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் சவுத் பல்கலைக்கழக அரங்கில் நடைபெற்றது.

அங்கே திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களின் பெரும் ஆரவாரத்திற்கிடையே, அல் நஸர் அணியின் ஜெர்சியை அணிந்தபடி கிறிஸ்டியானோ ரொனால்டோ தோன்றினார். அரங்கமே வண்ணமயமாக காட்சியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: