சர்வதேச கிரிக்கெட் சங்க தலைவராக சஷாங்க் மனோகர் தேர்வு!

Friday, May 13th, 2016

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் சேர்மனாக பிசிசிஐ முன்னாள் தலைவர் சஷாங்க் மனோகர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். ஐசிசி-யின் தலைவர் பதவி நீக்கப்பட்டு, சுதந்திரமான சேர்மன் பொறுப்புக்கு முதன்முறையாக தேர்வு செய்யப்பட்டவர் என்ற பெருமையை இதன் மூலம் பெற்றார் சஷாங்க் மனோகர்.

இது தொடர்பாக ஐசிசி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஐசிசி-யின் முழு உறுப்பினர்கள் அந்தஸ்து கொண்ட குழுவினர் பரிந்துரைத்த சீர்திருத்தங்களின் அடிப்படையில், சஷாங்க் மனோகர் புதிய சேர்மனாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே இறுதியில் ஐசிசி-யின் புதிய சுதந்திரமான சேர்மன் பதவிக்கு தேர்தல் நடைபெறவிருந்த நிலையில், சஷாங்க் மனோகர் தவிர வேறு யாரையும், உறுப்பினர்கள் பரிந்துரைக்காததால், அவர் ஒருமனதாக சேர்மனாக தேர்வு செய்யப்பட்டார் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சேர்மனாக தேர்வு செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள சஷாங்க் மனோகர், அனைத்து நாடுகளின் பிரதிகளுடன் இணைந்து, கிரிக்கெட்டின் எதிர்காலத்தை வளப்படுத்துவேன் என கூறியுள்ளார். சேர்மன் பதவிக்கு போட்டியிடுபவர் வேறு எந்த கிரிக்கெட் சங்கத்திலும் பொறுப்பு வகிக்க கூடாது என, அண்மையில் ஐசிசி அமைப்பு விதியில் திருத்தம் கொண்டு வரப்பட்டது.

இதன் பின்னணியில்,நேற்று முன்தினம் பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து சஷாங்க் மனோகர் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடதக்கது.

Related posts: