சச்சினினை முந்துவாரா குக்!
Wednesday, August 23rd, 2017
இந்திய அணியின் சச்சின் டென்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 200 போட்டிகளில் விளையாடி 51 சதங்களுடன் 15,921 ஓட்டங்களைக் குவித்துள்ளமை வாரலாற்று சாதனையாகவுள்ளது.
சச்சின் காலத்தில் விளையாடிய ரிக்கி பொண்டிங் 13,378 ஓட்டங்களையும் கலீஸ் 13,289 ஓட்டங்களையும் டிராவிட் 13,288 ஓட்டங்களையும் சங்கக்கார 12,400 ஓட்டங்களையும் லாரா 11,953 ஓட்டங்களையும் சந்தர்போல் 11,867 ஓட்டங்களையும் மஹேல ஜயவர்தன 11,814 ஓட்டங்களையும் குவித்துள்ளனர்.
T20 கிரிக்கெட் போட்டி தலைதூக்கியதால், டெஸ்ட் போட்டிகளில் இனிமேல் வரும் வீரர்கள் 200 போட்டிகளுக்கு மேல் விளையாடுவது கடினம். அவ்வாறு விளையாடினாலும் சச்சின் அடித்துள்ள 15,921 ஓட்டங்களை நெருங்குவது மிகமிகக் கடினம் .
இதனால் சச்சின் டென்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சாதனையாளராகத் திகழ்வார் என கணிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அவரின் சாதனைக்கு இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் அலஸ்டெயார் குக் அச்சுறுத்தலாக இருந்து வருகிறார்.
இங்கிலாந்து அணியில் மிகவும் இளம் வயதில் அறிமுகமான அலஸ்டெயார் குக், அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். அவர் 145 போட்டிகளில் விளையாடி 31 சதங்களுடன் 11,568 ஓட்டங்களைக் குவித்துள்ளார். சச்சினை விட 4353 ஓட்டங்கள் மட்டுமே பின்தங்கியுள்ளார்.
தற்போது அவருக்கு 32 வயதுதான் ஆகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக குக் சிறப்பான வகையில் ஆடவில்லை. இதனால் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறலாம் அல்லது அணியில் இருந்து நீக்கப்படலாம் என்ற செய்திகள் வந்து கொண்டிருந்தன.
ஆனால் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிராக எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் இரட்டைச்சதம் அடித்து மீண்டும் திறமையை வெளிப்படுத்தியுள்ளார் குக்.
இப்படியே விளையாடினால் குக் இன்னும் 4 வருடத்திற்கு அணியில் நீடித்து, 4353 ஓட்டங்களை எடுக்க வாய்ப்புள்ளது. பின்தங்கிய நிலையில் இருந்தாலும், சாதனைக்காக குக்கை இங்கிலாந்து அணி தொடர்ந்து வலியுறுத்தும். இதனால் குக், சச்சின் டென்டுல்கரின் சாதனைக்கு அச்சுறுத்தலாகவே உள்ளார்.
Related posts:
|
|