கோஹ்லி, ரோகித் அதிரடி: கதிகலங்கியது வெஸ்ட் இண்டீஸ்!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அணித்தலைவர் விராட் கோஹ்லி மற்றும் துணைத் தலைவர் ரோகித் ஷர்மா இருவரும் சதம் அடித்துள்ளனர்.
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கவுகாத்தியில் நடைபெற்றுள்ளது. இதில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. முதலில் துடுப்பெடுத்தாடத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சந்த்ரபால் 9 (15) ஓட்டங்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கியெரன் பவெல் அரை சதம் 51 (39) அடித்து அவுட் ஆனார். இதையடுத்து வந்த வீரர்களில் ஷிம்ரான் நிலைத்து விளையாடி அதிரடியாக 106 (78) ஓட்டங்கள் குவித்தார்.இதனால் அந்த அணியின் ஸ்கோர் சட்டென உயர்ந்தது. 50 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட் இழப்பிற்கு 322 ஓட்டங்கள் எடுத்தது.
இந்தியா தரப்பில் சஹால் 3, முகமத் ஷமி மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து 323 என்ற கடினமான இலக்கை எதிர்த்து இந்திய அணி களமிறங்கியது. தொடக்கத்திலேயே 4 (6) ஓட்டங்களில் விக்கெட்டை இழந்து தவான் அதிர்ச்சி கொடுத்தார்.
இதனால் இந்தியாவிற்கு இலக்கு கடினமாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் இதையடுத்து கைகோர்த்த ரோகித் ஷர்மா மற்றும் விராட் கோஹ்லி ஜோடி, வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்து வீச்சை சிதறடித்தது.
சரவெடி ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோஹ்லி 88 பந்துகளில் சதம் அடித்தார். ரோகித் ஷர்மா 84 பந்துகளில் சதம் அடித்தார்.இந்நிலையில் விராட் கோஹ்லி 140 (107) ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.
ரோஹித், கோஹ்லி இணை அதிரடியாக ஆடி 246 ஓட்டங்கள் குவித்தனர். அம்பதி ராயுடு(22), ரோஹித் சர்மா 152 ஓட்டங்கள் அடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதனையடுத்து இந்தியா அணி 42.1 ஓவர்கள் முடிவில் 326 ஓட்டங்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. எட்டு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா எளிதாக வெற்றி பெற்றது. இந்த போட்டியில் விராட் கோஹ்லி, ரோகித் சர்மா ஜோடி 5வது முறையாக 200 ஓட்டங்களுக்கு மேல் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|