கோஹ்லி – டிவில்லியர்ஸ் மிரட்டல் சதம் – 144 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெங்களூர் வெற்றி!

குஜராத் அணிக்கெதிரான ஐ.பி.எல் போட்டியில் பெங்களூர் அணி 144 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
9வது ஐ.பி.எல் தொடரின் 44வது லீக் போட்டியில் றொயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் குஜராத் லயன்ஸ் அணியும் மோதியது. பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் அணி பந்து வீச்சை தெரிவு செய்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூர் அணியின் தொடக்க வீரரான கெய்ல் 6 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய டிவில்லியர்ஸ் மற்றொரு தொடக்க வீரரான அணித்தலைவர் கோஹ்லியுடன் சேர்ந்து குஜராத் அணியின் பந்துகளை சிதறடித்தனர்.
20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு பெங்களூர் அணி 248 ஓட்டங்கள் குவித்தது.
கோஹ்லி 55 பந்தில் 5 பவுண்டரி, 8 சிக்சர்களுடன் சதம் கடந்து 109 ஓட்டங்களும், டிவில்லியர்ஸ் ஆட்டமிழக்காமல் 52 பந்தில் 10 பவுண்டரி, 12 சிக்சர்களுடன் சதம் விளாசி 129 ஓட்டங்களும் குவித்தனர்.
பந்துவீச்சில் பிரவீண் குமார் 2 விக்கெட்டும், குல்கர்னி 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 249 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 18.4 ஓவரில் பெங்களூர் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 104 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
அதிகபட்சமாக ஆரோன் பிஞ்ச் 37 ஓட்டங்களும், ஜடேஜா 21 ஓட்டங்களும், அணித்லைவர் மெக்கல்லம் 11 ஓட்டங்களும் எடுத்தனர். மற்ற அனைவரும் ஒற்றை இலக்க ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
இதனால் 144 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி சாதனை வெற்றி பெற்றது.
பந்துவீச்சில் பெங்களுர் அணியின் கிறிஸ் ஜோர்டன் 4 விக்கெட்டும், யுஸ்வேந்திரா சாகல் 3 விக்கெட்டும், சச்சின் பேபி 2 விக்கெட்டும் வீழ்த்தினர். டிவில்லியர்ஸ் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.
Related posts:
|
|