கோஹ்லியை சீண்ட வேண்டாம் – மைக்கேல் ஹஸி!

Saturday, February 4th, 2017
இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரின்போது, ஆஸ்திரேலிய வீரர்கள் விராத் கோஹ்லியை சீண்டிப் பார்க்கக் கூடாது என்று முன்னாள் நட்சத்திர வீரர் மைக்கேல் ஹஸி எச்சரித்துள்ளார்.  இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலிய அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. மிக வலுவான அணிகள் மோதும் இந்த தொடர் கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல் டெஸ்ட் போட்டி புனே, மகாராஷ்டிர கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் பிப். 23ம் தேதி தொடங்கும் நிலையில்,  இத்தொடர் குறித்து ஆஸி. முன்னாள் பேட்ஸ்மேன் மைக்கேல் ஹஸி கூறியதாவது:
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவின் நம்பர் 1 எதிரி என்றால் அது கேப்டன் விராத் கோஹ்லிதான். அவரை குறைந்த ரன்னில் அவுட்டாக்குவது மிக மிக முக்கியம். அதே சமயம் தேவையில்லாமல் அவரைக் கிண்டலடித்து சீண்டுவதை ஆஸி. வீரர்கள் தவிர்க்க வேண்டும். கோஹ்லி எப்போதுமே சவாலை விரும்புவார். ஆக்ரோஷம் தான் அவரது ஆயுதம். எனவே அவரை உசுப்பேற்றுவது ஆபத்தாகவே முடியும். சரியான வியூகம் அமைப்பதுடன், அதை களத்தில் துல்லியமாக அரங்கேற்றினால் மட்டுமே கோஹ்லி உள்ளிட்ட இந்திய பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்தலாம். வெறும் வாய்ச்சவடாலை வைத்துக் கொண்டு இந்திய ஆடுகளங்களில் சாதிப்பது கடினம். இதனால் கவனம் சிதறுவதுடன், இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாற நேரிடும். வெறும் ஆக்ரோஷமோ, வார்த்தைப் போரோ கை கொடுக்காது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அணியால் மட்டுமே வெற்றியை வசப்படுத்த முடியும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தற்சமயம் கோஹ்லி மிகச் சிறந்த பார்மில் உள்ளார். சொந்த மண்ணில், சூழ்நிலைக்கேற்ப செயல்படுவதில் வல்லவர். பொதுவாக அவர் சிறப்பாக விளையாடும்போது இந்திய அணி வெற்றி பெறுவதும் வழக்கம் என்பதை ஆஸி. வீரர்கள் நினைவில் கொள்ள வேண்டும். அதே போல கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர் இருவரும் ஆஸ்திரேலிய அணிக்கு மிக முக்கியமானவர்கள். இவர்கள் ரன் குவித்தால் அடுத்து வரும் வீரர்களும் சிறப்பாக விளையாடுவார்கள். இல்லையேல் கடும் நெருக்கடி ஏற்படுவதை தவிர்க்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

201702040418228537_Michael-Hussey-warns-Australia-against-sledging-Kohli_SECVPF

Related posts: