கொல்கத்தாவை பந்தாடியது ஐதராபாத்!

Sunday, April 15th, 2018

ஐ.பி.எல். போட்டியில் கேன் வில்லியம்சனின் பொறுப்பான ஆட்டத்தால் கொல்கத்தா அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.

ஐ.பி.எல். போட்டியின் 11-வது சீசனில் இன்று கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.நாணய சுழற்சியில் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது. கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ராபின் உத்தப்பாவும், கிறிஸ் லின்னும் களமிறங்கினர். ஆட்டத்தின் ஏழாவது ஓவரில் மழை குறுக்கிட்டது. ஐதராபாத் அணியினரின் சிறப்பான பந்துவீச்சில் சிக்கிய கொல்கத்தா அணி தடுமாறியது.சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

இதனால் கொல்கத்தா அணி நிர்ணயம் செய்யப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 138 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.அந்த அணியில் அதிகபட்சமாக கிறிஸ் லின் 34 பந்துகளில் ஒரு சிக்சர், 7 பவுண்டரியுடன் 49 ஓட்டங்களும், தினேஷ் கார்த்திக் 29 ஓட்டங்களும் எடுத்து அவுட்டாகினர்.ஐதராபாத் அணி சார்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டும், பில்லி ஸ்டான்லேக், ஷகிப் அல் ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 139 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது. ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விரித்திமான் சகா, ஷிகர் தவான் இறங்கினர்.தவான் 7 ஓட்டங்களிலும், சகா 24 ஓட்டங்களிலும், மணீஷ் பாண்டே 4 ஓட்டங்களிலும் அவுட்டாகினர்.அடுத்து களமிறங்கிய அணித்தலைவர் கேன் வில்லியம்சனும், ஷகிப் அல் ஹசனும் பொறுப்புடன் ஆடினர்.இருவரும் நிதானமாக ஆடி ஓட்டங்கள் சேர்த்தனர். 4-வது விக்கெட்டுக்கு 59 ஓட்டங்களை சேர்த்தனர். ஷகிப் அல் ஹசன் 27 ரன்னில் வெளியேறினார்.

சிறப்பாக விளையாடிய கேன் வில்லியம்சன் அரை சதமடித்து அவுட்டானார்.ஹூடாவும், யூசுப் பதானும் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர்.இறுதியில் ஐதராபாத் அணி 19 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 139 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஹூடா(5), யூசுப் பதான் 17 ஓட்டங்களுடனும் அவுட்டாகாமல் இருந்தனர்.கொல்கத்தா அணி சார்பில் சுனில் நரேன் 2 விக்கெட்டும், குல்தீப் யாதவ், பியுஷ் சாவ்லா, ஜான்சன் ஆகியோர் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

Related posts: