கொலின் முன்ரோ அதிரடி சதம் மீண்டும் சுருண்ட மேற்கிந்திய தீவுகள் அணி

Thursday, January 4th, 2018

நியூஸிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அணி மேற்கிந்திய தீவுகள் அணி, டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இழந்த நிலையில், இன்றைய தினம் நியூஸிலாந்து மற்றும் மே.தீவுகள் அணிகளுக்கிடையிலான 3வது இருபதுக்கு-20 போட்டியில் நியூஸிலாந்து அணி 119 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்று, தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் அதிரடியான துடுப்பாட்டத்தினூடாக நியூஸிலாந்து அணி மிகப்பெரியதொரு வெற்றியை பதிவு செய்துள்ளது.
இதில் கொலின் முன்ரோ இருபதுக்கு-20 போட்டிகளில் தனது 3வது சதத்தை இன்று பதிவுசெய்தார். இவர் 53 பந்துகளுக்கு முகங்கொடுத்து 10 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் அடங்கலாக 104 ஓட்டங்களை குவித்தார்.
நியூஸிலாந்தின் மவுண்ட் மௌங்கனுய் மைதனாத்தில் 3 இருபதுக்கு-20 சதங்கள் அடித்து, ஒரே மைதனாத்தில் 3 இருபதுக்கு-20 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் முன்ரோ பெற்றுக்கொண்டார்.
முன்ரோவுடன் துடுப்பெடுத்தாடிய மார்டின் குப்டில் 38 பந்துகளில் 63 ஓட்டங்களையும், அணித்தலைவர் வில்லியம்ஸன் 8 பந்துகளுக்கு முகங்கொடுத்து 19 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க, புரூஸ் 14 பந்துகளில் 23 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.20 ஓவர்கள் நிறைவில் நியூஸிலாந்து அணி 5 விக்கட்டுகளை இழந்து 243 ஓட்டங்களை குவித்தது.
பந்து வீச்சில் கார்கிஸோ பிராத்வைட் 2 விக்கடடுகளை வீழ்த்தினார்.
இந்நிலையில் 244 என்ற மிகப்பெரிய இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மே.தீவுகள் அணி 16.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுகளையும் இழந்து 124 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
இதில் மே.தீவுகள் அணி சார்பில் அதிகபட்சமாக என்ரு பிளெச்சர் 46 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். நியூஸிலாந்து சார்பில் சிறப்பாக பந்து வீசிய சௌதி 3 விக்கட்டுகளையும், சோதி மற்றும் போல்ட் ஆகியோர் தலா 2 விக்கட்டுகளை வீழ்த்தினர்.
இந்த போட்டியில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய கொலின் முன்ரோ, ஆட்ட நாயகனாகவும் தொடராட்ட நாயகனாகவும் தெர்ரிவானார்.

Related posts: