கே.ஸி.ஸி.ஸி. தொடர்: சென்றலைட்ஸ் சம்பியனானது!

Wednesday, May 16th, 2018

கே.ஸி.ஸி.ஸி. விளையாட்டுக் கழகம் யாழ்ப்பாண மாவட்ட துடுப்பாட்டச் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட துடுப்பாட்டக் கழகங்களுக்கு இடையில் நடத்திய தொடரில் சென்றலைட்ஸ் அணி கிண்ணத்தைக் கைப்பற்றியது.

கொக்குவில் இந்துக் கல்லூரியின் மைதானத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற இறுதியாட்டத்தில் சென்றலைட்ஸ் அணியை எதிர்த்து ஜொனியன்ஸ் அணி மோதியது. முதலில் துடுப்பெடுத்தாடிய ஜொனியன்ஸ் அணி 39.1 பந்துப் பரிமாற்றங்களில் சகல இலக்குகளையும் இழந்து 240 ஓட்டங்களைப் பெற்றது. கிசாந்துயன் 58 ஓட்டங்களையும் ஹரிப் பிரவீன் 48 ஓட்டங்களையும் அன்புஜன் 32 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் மயூரன் 5 இலக்குகளையும் ஜெரிக் துசாந் 2 இலக்குகளையும் தசோபன், டார்வின் இருவரும் தலா ஓர் இலக்கையும் கைப்பற்றினர்.

241 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றியென்ற இலக்குடன் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய சென்றலைட்ஸ் அணி 39.1 பந்துப் பரிமாற்றங்களில் 7 இலக்குகளை இழந்து 241 ஓட்டங்களைப் பெற்றது. நிரோசன் ஆட்டமிழக்காமல் 37 ஓட்டங்களையும் செல்ரன் 44 ஓட்டங்களையும் ஜெரிக் துசாந் 34 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஆட்ட நாயகனாக சென்றலைட்ஸ் அணியின் நிரோசன் தெரிவானார். சிறந்த பந்துவீச்சாளராக சென்றலைட்ஸ் அணியின் மயூரன், சிறந்த களத்தடுப்பாளராக ஜொனியன்ஸ் அணியின் பிரிந்தாபன், சிறந்த துடுப்பாட்ட வீரனாக ஜொனியன்ஸ் அணியின் சிந்துயன் ஆகியோர் தெரிவாகினர்.

Related posts: