கோல்கட்டா அணி பரிதாபம்:  பஞ்சாப் அணி ‘ஹாட்ரிக் வெற்றி!

Sunday, April 22nd, 2018

கோல்கட்டா அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் பஞ்சாப் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் ‘டக்வொர்த் லீவிஸ்’ முறையில் வெற்றி பெற்றது. அபாரமாக ஆடிய கெய்ல், லோகேஷ் ராகுல் அரைசதம் கடந்தனர்.

இந்தியாவில், 11வது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடந்த 18வது லீக் போட்டியில் கோல்கட்டா, பஞ்சாப் அணிகள் மோதின. பஞ்சாப் அணியில் மோகித் சர்மா நீக்கப்பட்டு அன்கித் ராஜ்பூத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கோல்கட்டா அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. ‘டாஸ்’ வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஷ்வின், ‘பீல்டிங் தேர்வு செய்தார்.

முதலில் ‘பேட்’ செய்த கோல்கட்டா அணி, 20 ஓவரில், 7 விக்கெட்டுக்கு 191 ரன்கள் எடுத்தது. கோல்கட்டா அணிக்கு கிறிஸ் லின் (74), கேப்டன் தினேஷ் கார்த்திக் (43), ராபின் உத்தப்பா (34) கைகொடுத்தனர். பஞ்சாப் அணி சார்பில் ஸ்ரன், ஆன்ட்ரூ டை தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

சவாலான இலக்கை விரட்டிய பஞ்சாப் அணி, 8.2 ஓவரில், விக்கெட் இழப்பின்றி, 96 ரன் எடுத்திருந்த போது மழையால் போட்டி தடைபட்டது. பின், 13 ஓவரில், 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என ‘டக்வொர்த் லீவிஸ்’ முறைப்படி இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. அபாரமாக ஆடிய கெய்ல், லோகேஷ் ராகுல் அரைசதம் கடந்தனர். ராகுல், 60 ரன்னில் அவுட்டானார்.

பஞ்சாப் அணி, 11.1 ஓவரில், ஒரு விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கெய்ல் (62) அவுட்டாகாமல் இருந்தார். கடந்த 2 போட்டியில் சென்னை, ஐதரபாத் அணிகளை வீழ்த்திய பஞ்சாப் அணி, ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்தது.

Related posts: