கெயிலின் சாதனைப் பெருமிதம்!

Wednesday, April 19th, 2017

டி20 கிரிக்கெட் போட்டியில் 10,000 ஓட்டங்களை  பெற்றுக்கொண்ட முதல் வீரர் என்ற பெருமையை அடைந்துள்ளார் கிறிஸ் கெயில்.

நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 20-ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் லயன்ஸ் அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி. இந்த இரு அணிகளுக்கு இடையே குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பெங்களூர் அணி, 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்தது. பெங்களூர் அணியில் கெயில், கோலி தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் கோலி நிதானமாக ஆடி வந்த நிலையில் கெயில் அதிரடி காட்டத் தொடங்கினார். அவர் 23 பந்துகளில் 3 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் அரைசதம் கடந்தார். இந்நிலையில், சதத்தை நோக்கி வேகமாக முன்னேறிய கெயிலை தடுத்து பெவிலியனுக்கு அனுப்பினார் குஜராத் வீரர் பாசில். 38 பந்துகளுக்கு 5 பவுண்டரிகள், 7 சிக்ஸர்களுடன் 77 ரன்கள் எடுத்திருந்த கெயில் எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து ஆடிய குஜராத் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

கெயில் பேட்டிங் செய்தபோது 7-ஆவது ஓவரை ஜடேஜா வீசினார். அந்த ஓவரை பவுண்டரி, சிக்ஸர்களாக வெளுத்து வாங்கிய கெயில், கடைசி பந்தை சிக்ஸருக்கு விரட்டினார். பறந்து சென்று பவுண்டரி லைனில் விழ இருந்த அந்தப் பந்தை பாய்ந்து பிடித்தார் மெக்கல்லம். இதற்கு நடுவரும் அவுட் கொடுக்க களம் திரும்ப எத்தனித்தார் கெயில். அப்போது மூன்றாவது நடுவர் மறுஆய்வின்போது, மெக்கல்லம் பந்தை பாய்ந்து பிடித்து உருண்டபோது அவரது தொப்பி பவுண்டரி லைனில் பட்டது ரீப்ளேவில் தெரியவந்தது. இதையடுத்து கெயில் நாட்-அவுட் என அறிவிக்கப்பட்டதுடன், அந்தப் பந்து சிக்ஸராக அறிவிக்கப்பட்டது.

குஜராத்துக்கு எதிரான இந்த ஆட்டத்தில் 77 ரன்கள் விளாசிய கெயில், டி20 கிரிக்கெட் போட்டியில் 10,000 ரன்கள் விளாசிய முதல் வீரர் என்ற பெருமையை தனதாக்கிக் கொண்டார். இதுகுறித்து பேசிய கெயில், சாதனையைக் கடந்தவுடன் அடித்து ஆடவேண்டும் என்று எண்ணினேன். அதுபோலவே விளையாடினேன். 10,000 ரன்களை எட்டிய முதல் வீரர் என்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன். இந்த உலகின் தலைவன் இன்னமும் விளையாடி வருகிறான். உயிருடன்தான் இருக்கிறேன். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தின் மூலம் ரசிகர்களுக்கு விருந்து படைப்பேன் என்றார்.

Related posts: