கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி – இலங்கை அணியின் தலைவர்!

Sunday, June 23rd, 2019

அணி வீரர்களின் கூட்டு முயற்சியால் இங்கிலாந்து அணியை வீழ்த்தினோம் என்று இலங்கை அணி தலைவர் கருணரத்னே தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை தொடரில் நேற்றுமுன்தினம் நடந்த போட்டியில், பலம் வாய்ந்த அணியாக வலம் வரும் இங்கிலாந்துக்கு அதிர்ச்சி கொடுத்து, இலங்கை அணி 2வது வெற்றியை பெற்றது.

இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்காவின் அபார பந்துவீச்சு வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அவர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இந்நிலையில் இலங்கை அணி தலைவர் கருணரத்னே வெற்றி குறித்து கூறுகையில், ‘வீரர்களின் கூட்டு முயற்சியால் இந்த வெற்றி கிடைத்தது. துடுப்பாட்ட வீரர்களும், பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டனர்.

இது மாதிரியான ஆடுகளத்தில் 300 ஓட்டங்களை குவிக்க முடியாது. இதனால் 250 முதல் 275 ஓட்டங்கள் வரை விரும்பினோம். மேத்யூசின் துடுப்பாட்டம் அபாரமாக இருந்தது.

232 ஓட்டங்கள் எடுத்தாலும் பந்துவீச்சாளர்கள் நேர்த்தியாக செயல்பட்டு இங்கிலாந்தை கட்டுப்படுத்தினார்கள். குறிப்பாக மலிங்காவின் பந்துவீச்சு பிரமாதமாக இருந்தது. அவர் ஒரு சகாப்தம். இதேபோல தனஞ்ஜெய டி சில்வாவும் அபாரமாக வீசினார்’ என தெரிவித்துள்ளார்.

தோல்வி குறித்து இங்கிலாந்து தலைவர் இயான் மோர்கன் கூறுகையில், எங்களது ஆட்டத்திறனை செயல்படுத்துவதில் கணிசமான அளவில் தவறுகள் செய்துவிட்டோம். போதுமான அளவு திறமையை வெளிப்படுத்தவில்லை.

எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும்போது இது மாதிரி ஒரு போட்டியில் தோல்வி ஏற்படும். இந்த ஆடுகளத்தில் பந்துவீச்சை எதிர்கொள்வது சவாலாக இருந்தது என தெரிவித்துள்ளார்.

Related posts: