குயின்டன் டி கொக் அதிரடியில் ஆடிப்போனது அவுஸ்திரேலியா!
Saturday, October 1st, 2016
அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் குயிண்டன் டி கொக்கின் அதிரடி ஆட்டத்தால் தென் ஆப்பிரிக்கா அணி ஆபார வெற்றி பெற்றுள்ளது.
அவுஸ்திரேலியா அணி, தென் ஆப்பிரிக்காவில் சுற்று பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இவ்விரு அணிகளுக்கிடையேயான முதலாவது ஒரு நாள் போட்டி தென் ஆப்பிரிக்காவில் உள்ள சூப்பர் ஸ்போர்ட்ஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்றது.இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணிக்கு ஆரம்ப வீரர்களாக வார்னரும், பின்சும் களமிறங்கினர். ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே அதிரடி காட்டியதால் அவுஸ்திரேலியா அணியின் ஓட்டம் மளமளவென உயர்ந்தது.
இதில் பின்ச் 33 ஓட்டங்கள் குவித்த போது பில்காவேயோ பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அதற்கு அடுத்த படியாக சொல்லி வைத்து போல் 40 ஓட்டங்கள் எடுத்திருந்த வார்னரை பர்னல் வெளியேற்றினார்.
அடுத்து வந்த அணியின் தலைவர் ஸ்மித் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார். இதைதொடர்ந்து ஆடிய பெய்ல் நிதான ஆட்டத்தை வெளிபடுத்தி அரைசதம் கடந்தார். இவருக்கு ஈடு கொடுத்து ஆடிய ஹாஸ்டிங்ஸ் அரைசதம் கடந்தார்.
இறுதியாக பெய்லி 74 ஓட்டங்களிலும் ஹாஸ்டிங்ஸ் 51 ஓட்டங்களிலும் அவுட்டாக அவுஸ்திரேலியா அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 294 ஓட்டங்கள் குவித்தது.தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஸ்டெயின் இரண்டு விக்கெட்டுகளும், பில்காவேயோ 4 விக்கெட்டுக்ளும் விழ்த்தி அசத்தினர்.
கடின இலக்கை துரத்துவதற்கு தென் ஆப்பிரிக்காவின் குயிண்டன் டி கொக்கும், ரஸ்சோவும் துவக்க வீரர்களாக களமிறங்கினர். முதலில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இருவரும் அதன் பின் வானவேடிக்கை காண்பிக்க தொடங்கினர்.
குயிண்டன் டி கொக் தான் சந்திக்கும் ஒவ்வொரு ஒவர்களிலும் ஒரு பவுண்டரி என அவுதிரேலியா வீரர்களின் பந்து வீச்சை வெளுத்து வாங்கினார். தன் பங்கிற்கு அதிரடி காட்டி வந்த ரஸ்சோ 63(45) ஓட்டங்கள் எடுத்து ஜாம்பா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த வீரர்கள் டிகாக்கிற்கு வாய்ப்பு கொடுக்க பவுண்டரிகள் சிக்சர் என மைதானத்தை அனல் பறக்க வைத்தார். இதில் டுபிலிசிஸ் 26 ஓட்டங்களிலும், டுமினி 9 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
தென் ஆப்பிரிக்காவை வெற்றியின் விளிம்புக்கு கொண்டு சென்ற டி காக் 178(142) ஓட்டங்கள் குவித்த போது பொலாண்ட் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இறுதியா தென் ஆப்பிரிக்கா அணி 36.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 295 ஓட்டங்கள் குவித்து அபார வெற்றி பெற்றது.
அவுஸ்திரேலியா தரப்பில் பொலாண்ட் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 178(16பவுண்டரிகள், 11 சிக்ஸர்கள்) ஓட்டங்கள் குவித்த குயின்டன் டி காக் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார். தென் ஆப்பிரிக்காவில் டி வில்லியர்ஸ் இல்லாத குறையை குயின்டன் டி கொக் தீர்த்து வைத்துள்ளார். இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டி வரும் 2 ஆம் திகதி வன்னர்டெர்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.
Related posts:
|
|