கிரிக்கெற் வீரர் கித்துருவன் விதானகேவுக்கு ஓராண்டுத் தடை?

Friday, July 8th, 2016

இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் வீரரரான கித்துருவன் விதானகே, ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டு, ஓராண்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான அறிக்கையொன்றை வெளியிட்ட இலங்கை கிரிக்கெட் சபை, என்ன காரணத்துக்காக இந்த ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் குறிப்பிடாத போதிலும், கடந்த மாதம் கொழும்பிலுள்ள இரவு விடுதியொன்றில் இடம்பெற்ற மோதல் சம்பவமொன்றில், கித்துருவன் விதானகேவும் றமித் றம்புக்வெல்லவும் சம்பந்தப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், ஒழுக்காற்று நடவடிக்காக வாய்மூலமாகவும் எழுத்துமூலமாகவும், சாட்சிகளிடமிருந்து சாட்சியங்கள் பெறப்பட்டதாகத் தெரிவித்த இலங்கை கிரிக்கெட் சபை, கித்துருவன் விதானகேவிடமும் விசாரணை நடத்தப்பட்டதாகத் தெரிவித்தது.

இதன் முடிவிலேயே, அவர் மீது ஓராண்டுத் தடை விதிக்கப்படுவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, 2014ஆம் ஆண்டு காலியில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியொன்றில் விளையாடிக் கொண்டிருந்த விதானகே, போட்டி முடிவடையாத நிலையில், வீரர்கள் தங்கியிருந்த ஹொட்டலிலிருந்து இரவு வெளியேறியிருந்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு, அவரது போட்டி ஊதியம் முழுவதும் அபராதமாக விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை கிரிக்கெட் சபையின் ஊடக அறிக்கையில், றமித் றம்புக்வெல்ல தொடர்பாகத் தகவலேதும் வழங்கப்பட்டிருக்கவில்லை. ஆனால், அவருக்கெதிராகப் போதிய ஆதாரங்கள் இன்மையால், அவர் விடுவிக்கப்பட்டார் என, உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

Related posts: