கிரிக்கெட் அணியின் சம்பள ஒப்பந்த வீரர்கள் எண்ணிக்கை குறைப்பு!

Wednesday, September 14th, 2016

இலங்கை கிரிக்கெட் தேசிய அணியின் சம்பள ஒப்பந்த வீரர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தயாராகி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. இவ்வாறு ஒப்பந்த வீரர்களின் எண்ணிக்கையை குறைப்பதன் மூலம் வீரர்களுக்கு இடையில் போட்டியை ஏற்படுத்தி அவர்களின் திறனை அதிகரிக்க இலங்கை கிரிக்கெட் எதிர்பார்த்துள்ளது.

தேசிய ஒப்பந்த வீரர்களை இணைப்பதில் தேசிய அணியில் இடம்பெறும் 20 வீரர்கள் முதல் நிலை பிரிவிலும் இலங்கை ஏ மற்றும் வளர்ந்துவரும் அணியில் 15 பேர் இரண்டாம் நிலை பிரிவிலும் சேர்ப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு திலங்க சுமத்திபால நியமிக்கப்பட்டது தொடக்கம் இலங்கை கிரிக்கெட் வீரர்களுடன் செய்துகொள்ளப்படும் ஆண்டு ஒப்பந்தம் கைச்சாத்திடுவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது.

இந்த ஒப்பந்தம் ஒவ்வொரு ஆண்டின் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் கைச்சாத்திடப்படுகின்றபோதும் இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களுக்கு இலங்கை அணி ஆண்டு ஒப்பந்தத்திற்கு பதில் போட்டித் தொடருக்கான ஒப்பந்தங்களுடனேயே பங்கேற்றது.

2016 – 17 க்கான வருட கிரிக்கெட் சம்பள ஒப்பந்தம் இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாத முதல் வாரத்தில் வீரர்களிடம் முன்வைக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஏற்பாடுகளை செய்திருப்பதாக தெரியவருகிறது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடன் வீரர்கள் ஒப்பந்தத்தில் இணைக்கப்படும்போது வீரர்களின் திறமை அடிப்படையில் ‘ஏ’, ‘பி’ மற்றும் ‘சி’ என்று பிரிக்கப்படுகின்றனர். இதன்போது அணித்தலைவர் அன்ஜலோ மத்தியூஸ், தினேஷ் சந்திமால் மற்றும் ரங்கன ஹேரத் மூவரும் ஏ பிரிவில் இணைக்கப்பட வேண்டும் என்பது இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவின் பரிந்துரையாகும்.

தேசிய அணியில் இடம்பெறும் 20 வீரர்களில் அன்ஜலோ மத்தியூஸ், தினேஷ் சந்திமால், ரங்கன ஹேரத், லசித் மாலிங்க, தனங்ஜய டி சில்வா, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, டில்ருவன் பெரேரா, திசர பெரேரா, தனுஷ்க குணதிலக்க, சுரங்க லக்மால், துஷ்மன்த சமீர, நுவன் பிரதீப், மிலின்த சிரிவர்தன, ஊபுல் தரங்க, சச்சித் பதிரன, சச்சித்ர சேனாணாயக்க, அமில அபொன்சு, லக்ஷான் சதகேன் மற்றும் சாமர கபுகெதர இணைக்கப்பட வேண்டும் என்று தேர்வுக்குழு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

எனினும் இவர்களில் வீரர்கள் பலர் தொடர்பில் உயர்நிலை அதிகாரிகளிடம் உடன்பாடொன்று இல்லாத நிலையில் தேசிய அணியின் 20 பேர் தொடர்பில் முடிவொன்றை எட்டுவதில் இழுபறி நீடிப்பதாக குறிப்பிடப்படுகிறது.

இது தொடர்பில் இலங்கை கிரிக்கெட்டின் உயர்நிலை அதிகாரி ஒருவர் குறிப்பிடும்போது,

“எப்படி இருந்தபோதும் நாம் தேசிய அணியின் 20 பேர் மற்றும் மேலும் 15 பேர் வரை ஒப்பந்தத்தில் இணைக்க இருக்கிறோம். அவ்வாறு இணைக்கப்படும் வீரர்கள் மூன்று பிரிவுகளாக பிரித்து தரம் வழங்கப்படும்

கடந்த காலங்கள் போன்று 60, 70 பேர் ஒப்பந்தத்தில் இணைக்கப்பட மாட்டார்கள். அணியினர் போட்டியில் வெற்றிபெறும்போது அதிக தொகை அவர்களுக்கு கிடைக்கும் வகையிலேயே இம்முறை ஒப்பந்தம் அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.

2014 ஆம் ஆண்டில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடன் வருடாந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட வீரர்களின் எண்ணிக்கை 104 பேர் என்பதோடு அதற்கு பின்னர் அந்த எண்ணிக்கை 40 தொடக்கம் 60 பேர் வரை குறைக்கப்பட்டது.

15

Related posts: