கிண்ணத்தை தனதாக்கியது வவுனியா இந்துக் கல்லூரி!

Saturday, May 12th, 2018

வடக்கு மாகாணத்தில் முதன்முறையாக பெண்களுக்கான கிரிக்கெட் போட்டி  புதன்கிழமை வவுனியா நகரசபை மைதானத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் வவுனியா இந்துக் கல்லூரிப் பெண்கள் அணியும் மன்னார் சித்தி விநாயகர் இந்துக் கல்லூரி பெண்கள் அணியும் மோதின. அதில் வவுனியா இந்துக் கல்லூரி அணி வெற்றிபெற்றது.

முதல் இன்னிங்ஸில் மன்னார் சித்தி விநாயகர் இந்துக் கல்லூரி அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 99 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. சித்தி விநாயகர் சார்பாக முகமட் ஜல்லா 40 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் வவுனியா இந்துக் கல்லூரியின் தினோசிகா 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு தனது முதலாவது இன்னிங்ஸை ஆரம்பித்த வவுனியா இந்துக் கல்லூரி அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 126 ஓட்டங்களைப் பெற்றது.

அதனை தொடர்ந்து 27 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய சித்தி விநாயகர் அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 112 ஓட்டங்களைப் பெற்றநிலையில் போட்டி நிறைவுக்கு வந்தது. குறித்த போட்டி சமநிலையில் முடிவடைந்தாலும் முதல் இன்னிங்ஸில் சித்திவிநாயகர் அணியை விட அதிக ஓட்டங்களைக் குவித்த வவுனியா இந்துக் கல்லூரி அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

Related posts: