கன்னத்தில் அறைந்த பார்சிலோனாவின் செர்கிக்கு தடை!

Saturday, May 12th, 2018

ரியல் மெட்ரிட் கால்பந்து அணியின் வீரர் மார்செலோவின் கன்னத்தில் அறைந்த பார்சிலோனா அணியின் பின்கள வீரர் செர்கி ரொபர்டோவுக்கு நான்கு போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் அவருக்கு எஞ்சிய லா லிகா போட்டிகள் மற்றும் அதற்கு அடுத்த போட்டியில் ஆட முடியாமல் போயுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (06) நடைபெற்ற பார்சிலோனா மற்றும் ரியெல் மெட்ரிட் அணிகளுக்கு இடையிலாக பதற்றம் கொண்ட எல் கிளாசிக்கோ போட்டியின்போதே இந்த சம்பவம் இடம்பெற்றது.

இந்தப் போட்டி 2-2 என்ற கோல்கள் கணக்கில் சமநிலையில் முடிந்தது.

மற்றொரு வீரரை தாக்கியதற்காக இந்த தடை விதிக்கப்படுவதாக ஸ்பெயின் கால்பந்து சம்மேளனத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் வெளியான வாராந்த ஒழுக்காற்று அறிக்கையில், இந்த தடை பற்றிய விபரம் வெளியாகியுள்ளது.

போட்டியின் முதல் பாதி மேலதிக நேரத்தில் வைத்து பார்சிலோனா கோல் எல்லை பகுதியில் பந்தை தடுக்க முயன்றபோது, மார்செலோ மீதான இந்த தாக்குதலில் ஈடுபட்ட ரொபர்டோவை நடுவர் சிவப்பு அட்டை காண்பித்து மைதானத்தில் இருந்து வெளியேற்றினார்.

பந்து அருகில் இல்லாது இருந்த போது மோதல் ஏற்படும் வகையில் எதிரணி வீரர் மீது தனது கையால் அதிக பலப்பிரயோகத்தை பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து குறித்த வீரர் வெளியேற்றப்பட்டார்‘ என்று நடுவர் அலெஜன்ட்ரோ ஹெர்னான்டஸ் தனது போட்டி குறித்த அறிக்கையில் எழுதியுள்ளார்.

ரொபர்டோவால், ஏற்கனவே புதன்கிழமை (09) நடந்த வில்லாரியல் அணியுடனான போட்டியில் விளையாட முடியாமல் போனது.

இந்த போட்டியில் பார்சிலோனா 5-1 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன்மூலம் அந்த அணி லா லிகா தொடரில் தோல்வியுறாத அணியாக இந்த பருவத்தை முடித்துக்கொள்ளும் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

ஸ்பெயின் கால்பந்து வரலாற்றில் இவ்வாறான ஒரு சாதனையை எந்த அணியும் படைத்ததில்லை.

பார்சிலோனா ஏற்கனவே லா லிகா தொடரில் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ரொபர்டோவுக்கு லா லிகா தொடரில் பார்சிலோனா ஆடும் கடைசி இரண்டு போட்டிகளான லெவன்டே மற்றும் ரியல் சொசிடாட் அணிகளுடனான போட்டிகளில் ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த தடையின்படி, ஸ்பெயின் தேசிய அணி வீரரான ரொபர்டோவுக்கு தனது சம்பியன் பட்டத்தை தக்கவைக்கும் அடுத்த லா லிகா பருவத்தில் பார்சிலோனா ஆடும் முதல் போட்டியிலும் பங்கேற்க முடியாமல் போயுள்ளது.

ஞாயிறு நடந்த பரபரப்பான எல் கிளாசிக்கோ போட்டியில் ரொபர்டோவின் நேரடி சிவப்பு அட்டை தவிர, மொத்தம் எட்டு வீரர்கள் மஞ்சள் அட்டை பெற்றனர்.

மைதானத்தில் ரியெல் மெட்ரிட் தலைவர் செர்ஜியோ ராமோஸ் மற்றும் பார்சிலோனா முன்கள வீரர்களான லியோனல் மெஸ்ஸி மற்றும் லுவிஸ் சுவாரஸ் ஆகியோர் கோபத்தோடு மோதலில் ஈடுபடுவதையும் காண முடிந்தது.

எவ்வாறிருப்பினும், குறித்த போட்டியின் இரண்டாவது பாதியை 10 வீரர்களுடன் ஆடி 2-2 என சமநிலைப்படுத்தியமையினால் கடந்த நான்கு எல் கிளாசிக்கோ மோதல்களில் ரியல் மெட்ரிட் அணியிடம் தோல்வியுறாத அணியாக பாரிசிலோனா உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: