கண்ணீருடன் விடைபெற்ற மெஸ்ஸி!

Tuesday, June 28th, 2016

சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து திடீரென ஓய்வு அறிவித்து உலக ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் அர்ஜென்டினாவின் “கால்பந்து மந்திரன்” லயோனல் மெஸ்ஸி.

கோபா அமெரிக்கா இறுதிப் போட்டியில் பெனால்டி ஷூட் அவுட்டில் தன்னால் கோல் அடிக்க முடியாமல் போன வெறுப்பினால் சர்வதேச கால்பந்துப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் மெஸ்ஸி.

2007 கோபா அமெரிக்கா இறுதிப் போட்டியில் தோல்வி, 2014ல் உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் ஜேர்மனியிடம் தோல்வி, 2015 கோபா அமெரிக்கா இறுதிப் போட்டியில் சிலியிடம் தோல்வி, தற்போதும் சிலியிடம் இறுதிப்போட்டியில் தோல்வி, இதனால் தான் மெஸ்ஸி வெறுப்படைந்து விட்டார்.

“நான் அனைத்தையும் செய்து பார்த்து விட்டேன், ஆனால் 4 இறுதிப் போட்டிகளில் இருந்தும் சாம்பியன் ஆக முடியவில்லை. இது எனக்கும், அணிக்கும் கடினமான தருணம். எனவே அர்ஜென்டினா அணிக்கு ஆடுவது முடிந்துவிட்டது” என்று கூறி வெறுப்புடன் விடைபெற்றுள்ளார் மெஸ்ஸி. இவரின் இந்த திடீர் ஓய்வு அறிவிப்பு உலகமெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்த நிலையில் இந்த கால்பந்து மந்திரன் பற்றிய சில தகவல்களை பார்க்கலாம்.

1986ஆம் ஆண்டு அர்ஜென்டினாஅணிக்கு ‘ஹேண்ட் ஆஃப் காட்’ கோலால் கிண்ணம் வென்று கொடுத்த டீகோ மரடோனாவின் இடத்தை நிரப்பியவர் லயோனல் மெஸ்ஸி. சில சமயங்களில் மரடோனாவை விட மெஸ்ஸியே சிறந்தவர் என்றும் நிபுணர்கள் விவாதித்துள்ளனர்.

ரொசாரியோவில் 1987ஆம் ஆண்டு பிறந்த லயோனல் மெஸ்ஸி ஹார்மோன் பிரச்சனையால் அவதிப்பட்டார். அப்போது அவருக்கு வயது 13. இதை சரிசெய்ய அதிக செலவாகும் என்ற நிலையில், மெஸ்ஸியின் பெற்றோர்கள் ஸ்பெயினில் குடிபுகுந்தனர். அப்போது தான் பார்சிலோனா கிளப் மெஸ்ஸிக்கு உதவ முன்வந்தது. இவரிடம் அரிய கால்பந்து திறமையை கண்ட அந்த கிளப், மெஸ்ஸியை ஒப்பந்தம் செய்து அவரது மருத்துவச் செலவையும் ஏற்றுக் கொண்டது.

பார்சிலோனா அணியின் தொழில்நுட்ப செயலாளரான கார்லஸ், 13 வயது மெஸ்ஸியுடன் ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். மெஸ்ஸியின் திறமையை கண்டு வியந்த அவர் உடனடி ஒப்பந்தத்திற்கு தயாரானார். ஆனால் அங்கு ஒப்பந்த பேப்பர் ஏதும் இல்லாததால் ’டிஸ்ஸூ பேப்பர்’ கொண்டு ஒப்பந்த கடிதம் தயார் செய்யப்பட்டது. அதில் மெஸ்ஸி கையெப்பம் இட்டார். இது டிசம்பர் 14, 2000ம் ஆண்டு நடந்தது.

தனது 17வது வயதில் 2004ஆம் ஆண்டு முதல் டிவிஷன் போட்டியில் இஸ்பான்யாலுக்கு எதிராக முதல் போட்டியில் அறிமுகமானார் மெஸ்ஸி. அன்று முதல் பார்சிலோனாவின் வளர்ப்புப் பிள்ளையாகவே பார்க்கப்படுகிறார்.

மெஸ்ஸி அர்ஜென்டினா அணிக்காக ஹங்கேரிக்கு எதிராக முதலில் களமிறங்கினார். இடைவேளைக்கு பிறகு 18 நிமிடங்கள் கழித்து இறங்கிய மெஸ்ஸி 47 வினாடிகள் ஆடிய பிறகு வெளியே அனுப்பப்பட்டார்.

அர்ஜென்டினா அணிக்காக 112 போட்டிகளில் 55 கோல்களை அடித்து அதிக கோல்களுக்கான சாதனையை தன் வசம் வைத்துள்ளார். அதேபோல் லா லீகாவில் ஒரே சீசனில் 50 கோல்கள் அடித்த சாதனையையும், ஒரு ஆண்டில் 91 கோல்கள் அடித்த சாதனையையும் படைத்துள்ளார் மெஸ்ஸி.

கால்பந்து களத்தை கலக்கிய மெஸ்ஸி ஒரு உணவுப் பிரியர். அவர் எந்த உணவையும் விட்டு வைக்க மாட்டார். அனைத்தையும் ஒரு கை பார்த்து விடுவார். உலர்ந்த மாட்டிறைச்சி, ஹாம், நறுக்கிய தக்காளி, பாலாடைக்கட்டி,வெங்காயம் மற்றும் மசாலா கொண்ட உணவுகள் அவருக்கு ரொம்ப பிடிக்கும்.

2007ல் மெஸ்ஸி ஒரு அறக்கட்டளையை நிறுவி உடல் நல குறைவால் அவதிப்படும் குழந்தைகளின் மருத்துவ மற்றும் உணவு வசதிக்காக உதவி வருகிறார். சொந்த ஊரில் கட்டப்பட்ட குழந்தைகள் மருத்துவமனைக்கு 8,12,000 டொலர்கள் வாரி வழங்கியவர் மெஸ்ஸி. அதே போல் 2013இல் சிரியாவில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு 1,30,000 டொலர் வழங்கி உதவினார்.

Untitled-1 copy

625.0.560.320.500.400.194.800.668.160.90 (2)

Related posts: