ஒலிம்பிக் விளையாட்டு போட்டி ஜப்பானின் டோக்கியோ நகரில் இன்று ஆரம்பம்!

Friday, July 23rd, 2021

கொரோனா பீதி காரணமாக கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய விளையாட்டு போட்டியான ஒலிம்பிக் விளையாட்டு போட்டி ஜப்பானின் டோக்கியோ நகரில் இன்று ஆரம்பமாகிறது.

ஆரம்ப நிகழ்வு இலங்கை நேரப்படி மாலை நான்கு முப்பதுக்கு ஆரம்பமாகும் ஜப்பானின் மன்னர் தெரஹிதோ உள்ளிட்ட 15 அரசு தலைவர்கள் இதில் பங்கேற்பார்கள்.

ஒலிம்பிக் விளையாட்டு போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 3வது முறையாக கடந்த ஆண்டு நடைபெற இருந்தது. ஏற்பாடுகள் எல்லாம் முடிந்த நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பிரச்னை எழுந்ததை அடுத்து போட்டி இந்த ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. ஜப்பானில் இப்போதும் கொரோனா பரவல் அச்சுறுத்தல் நிலவுவதால் அங்கு ஒலிம்பிக்கை நடத்த கடும் எதிர்ப்பு, போராட்டங்கள் நடந்தன. எனினும், இந்த ஆண்டு போட்டியை நடத்துவதில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியும், ஜப்பான் அரசும் உறுதியாக உள்ளன.

அதற்கு வசதியாக நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அதனால் எந்த பிரச்னையுமின்றி ஒலிம்பிக் போட்டி இன்று தொடங்குகிறது.

போட்டிகள் அனைத்தும் பூட்டிய அரங்கில் நடக்கும். கால்பந்து, ஹாக்கிஇ டென்னிஸ், தடகளம் உள்பட குழு, தனிநபர் என 46 வகையான விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. மொத்தம் 11,683 வீரர்கள் பங்கேற்கின்றனர். இவர்களை தவிர பயிற்சியார்கள், அணி மேலாளர்கள், உதவியாளர்கள், மருத்துவர்கள், முடநீக்கியல் நிபுணர்கள் என 205 நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் இப்போது ஜப்பானில் முகாமிட்டுள்ளனர்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, உலக தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்பட 1000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் பாரம்பரியப் பெருமையை விளக்கும் வகையிலான கலைநிகழ்ச்சிகள், பார்வையாளர்களை பிரமிக்க வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை சார்பில் அமைச்சர் நாமல் ராஜபக்ச இதில் பங்கேற்க உள்ளார். ஆரம்ப நிகழ்வை பார்வையிடும் சந்தர்ப்பம் ஜப்பான் மக்களுக்கு கிடைக்காது. இந்த நிகழ்வை நேரலையாக ஒளிபரப்புவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

டோக்கியோ ஒலிம்பிக்சில் இதுவரை இல்லாத அளவுக்கு 119 வீரர், வீராங்கனைகள் இந்தியா சார்பில் பங்கேற்கின்றனர். இவர்களோடு பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் என மொத்தம் 228 பேர் அடங்கிய பிரமாண்ட இந்திய குழு டோக்கியோ சென்றுள்ளது.

தொ டக்க விழா அணிவகுப்பில் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், இந்திய ஆண்கள் ஹாக்கி அணி கேப்டன் மன்பிரீத் சிங் இருவரும் தேசியக் கொடி ஏந்தி தலைமையேற்க உள்ளனர்.

Related posts: