ஒற்றை ஷூவோடு ஓடி சாதித்த வீராங்கனை!

Monday, August 15th, 2016

ரியோ ஒலிம்பிக் போட்டியில் எத்தியோப்பியாவைச் சேர்ந்த தடகள வீராங்கனை ஒருவர் ஒற்றை ஷூவோடு ஓடி அனைவரின் அனுதாபத்தையும் பெற்றுள்ளார்.

எத்தியோப்பாவைச் சேர்ந்த தடகள வீராங்கணை எடினேஷ் டிரோ, ரியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் வாய்ப்புள்ளவர்களில் ஒருவராக கருதப்பட்டவர்.

ஆனால் துருதிர்ஷ்டம் அவரைத் துரத்தியது. 17 பேர் ஓடிய அந்தப் பந்தயத்தில் இரண்டரை லேப்கள் மீதம் இருந்த நிலையில், ஓடுதளத்தில் தண்ணீர் இருந்த காரணத்தால் சக போட்டியாளர் ஒருவர் கால் இடறி கீழே விழுந்தார்.

கீழே விழுந்த அவர் டிரோவின் காலில் மோதினார். இந்த மோதலில் இன்னொரு வீராங்கனையும் கீழே விழுந்தார்.

கீழே விழுந்த இரு வீராங்கனைகளும் எழுந்த ஓடத் தொடங்கினார். ஆனால் கீழே விழாத டிரோவுக்கு பிரச்னை தனது காலணியின் வாயிலாக எழுந்தது.

அந்த வீராங்கனை டிப்ரோவின் கால் மீது விழ, அவரது ஷூ பழுதடைந்தது. சில நொடிகள் நின்று அதை சரி செய்ய முயற்சி செய்தார் டிரோ.

ஆனால் மற்ற அனைவரும் தன்னை முந்திவிட்டதால் அதற்குமேல் எதுவும் யோசிக்காமல் பழுதடைந்த அந்த ஷூவை கழட்டி வீசிவிட்டு ஒற்றை ஷூவோடு ஓடத் தொடங்கினார் டிரோ.

அதைப் பார்த்த மொத்த அரங்கமும் டிரோவை உற்சாகப்படுத்தியது. சக நாட்டவரைப் போல் கூச்சலிட்டு அந்தப் போராளிக்கு அவர்கள் தங்கள் ஆதரவை அளித்தனர். ஒற்றை ஷூவோடு இலக்கை அடைய வேண்டும் என்ற வெறியோடும் இன்னும் வேகமாக ஓடினார் டிரோ.

சுமார் அரை மைல் தூரம் ஒற்றை ஷூவோடு ஓடிய டிரோ பலரையும் முந்தி ஏழாம் இடம் பிடித்தார். முதல் மூன்று இடம் பிடிப்பவர்கள் மட்டுமே இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும் என்பதால் டிரோ டிராக்கிலேயே கண்ணீர் விட்டு அழத்தொடங்கினார்.

அவரது இந்த முயற்சியைப் பாராட்டி சக போட்டியாளர்கள் அனைவரும் அவருக்கு ஆறுதல் அளித்தனர். பார்வையாளர்கள் அனைவரும் ஒரு சாம்பியனுக்குத் தரும் கோஷத்தை டிரோவுக்காக எழுப்பினர்.

தெரியாமல் ஏற்பட்ட விபத்தால் மூன்று வீராங்கனைகளின் வாய்ப்பு பறிபோனதால் மேல்முறையீடு செய்யப்பட்டு டிரோ, டிரீகி, ஆயிஷா பிராட் ஆகிய மூவருக்கும் இறுதிப்போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஒரு உண்மையான ஒலிம்பியன் தனது போராட்டக் குணத்தைக் கைவிடமாட்டார். தோல்வியைத் துரத்தி தனது கண்ணீருக்கு அர்த்தம் சேர்ப்பார். அப்படியான ஒரு போராளியைத் தான் பிரேசிலின் ஒலிம்பிக் அரங்கம் எடினேஷ் டிரோ வாயிலாக கண்டுகளித்தது.

Related posts: