ஒப்பந்தம் இல்லையேல் தொடர்களும் இல்லை!

Tuesday, July 4th, 2017

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கும் அந்நாட்டு கிரிக்கெட் சபைக்கும் இடையிலான ஒப்பந்தம், ஜூலை 1ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ள நிலையில், புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடும் வரையில், கிரிக்கெட் தொடர்களில் பங்குபற்றப் போவதில்லை என, வீரர்கள் அறிவித்துள்ளனர்.

சிட்னியில், நடைபெற்ற, அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் சங்கக் கூட்டத்திலேயே, இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இதன்படி, சபைக்கும் வீரர்களும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படாமல், ஊதிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப் போவதில்லை என்பதை உறுதிப்படுத்திய வீரர்கள், தென்னாபிரிக்காவுக்கான அவுஸ்திரேலிய ஏ அணியின் தொடரிலும் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்தனர். ஆனால், அந்தத் தொடருக்காகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள வீரர்கள், பிறிஸ்பேணில் இடம்பெறவுள்ள பயிற்சி முகாமில் பங்குபற்றச் சம்மதம் தெரிவித்தனர்.

அந்தத் தொடருக்கான தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள உஸ்மான் கவாஜா கருத்துத் தெரிவிக்கையில், “இது, இலகுவான ஒன்றல்ல. கிரிக்கெட் விளையாடுவதற்கு, நான் மிகவும் விரும்புகிறேன். நீண்டகாலமாக, நான் விளையாடியிருக்கவில்லை. ஏனைய வீரர்களுக்கும் அவ்வாறு தான். ஆனால், நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டுள்ளோம்” என்றார்.

ஜூலை 1ஆம் திகதியுடன், ஒப்பந்தம் நிறைவடைந்துள்ள நிலையில், சுமார் 230 வீரர்கள், தங்களுடைய வேலையை இழந்துள்ளனர். ஆனால், பயிற்சிகளில் ஈடுபடுவதற்கு, இவ்வீரர்கள் சம்மதத்துடன் காணப்படுகின்றனர்.

இந்த நிலைமை தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த, கிரிக்கெட் சபையின் பேச்சாளர் ஒருவர், அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் சங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு, தமது சபை தயாராகவே இருப்பதாகத் தெரிவித்தார்.

 அத்தோடு, ஏ அணியின் தொடரென்பது, வீரர்கள் தங்களை வளர்த்துக் கொள்வதற்கான தொடர் என வர்ணித்த அவர், அந்தத் தொடரில் பங்குபற்றாமல் விடுவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானம், ஆச்சரியம் தருவதாகவும் குறிப்பிட்டார்.

Related posts: