ஒப்பந்தத்தில் இதுவரை கைச்சாத்திடாத இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள்!

Thursday, October 20th, 2016

இலங்கை தேசிய அணியின் வீரர்களுக்கான புதிய வருடாந்த ஒப்பந்தங்களை கைச்சாத்திட இலங்கை கிரிக்கெட் சபையினால் வழங்கப்பட்ட கால அவகாசம் இம்மாதம் 20ஆம் திகதியுடன் அதாவது இன்றுடன் நிறைவடைகின்றது.

ஆனால் இதுவரை ஒப்பந்தங்களை கைச்சாத்திட வீரர்கள் சமூகமளிக்கவில்லை.

அவர்களினால் இன்றைய தினம் ஒப்பந்தங்கள் கைச்சாத்திட தவறும் பட்சத்தில், சிம்பாப்வே சுற்றுத்தொடர் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளை உள்ளடக்கிய முத்தரப்பு தொடர் ஆகியவற்றிற்கு இலங்கை சார்பில் இரண்டாம் நிலை அணி ஒன்றை அனுப்ப வேண்டி ஏற்டபடும் என இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

எனினும், இலங்கை அணியின் வீரர்களினால் இன்று ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிர்வாகிகள் மற்றும் வீரர்களுக்கிடையிலான முறுகல் நிலை காரணமாக இதுவரையிலும் இலங்கை அணியின் 15 பேர் கொண்ட குழாம் அறிவிக்கப்படவில்லை. 2014ஆம் ஆண்டிலும் வருவாய் பங்கிடுதல் தொடர்பில் இதே போன்றதொரு முறுகல் நிலை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

நேற்று (19) மற்றும் நேற்று முன்தினம் (18) இலங்கை கிரிக்கெட் சபைக்கும் சிரேஷ்ட கிரிக்கெட் வீரர்களுக்குமிடையில் பல்வேறு சந்திப்புக்கள் இடம்பெற்ற போதிலும் பல முன்னணி வீரர்கள் ஒப்பந்தத் தொகையை விட அதிகப்படியான தொகையை கோரியதாகவும் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

srilanka-team

Related posts: