எவருக்கும் முதலிடம் நிரந்தரமல்ல – சானியா மிர்ஸா,!

இரட்டையர்களுக்கான உலகத் தரப்படுத்தலில் முதலிடத்தில் காணப்படும் இந்தியாவின் சானியா மிர்ஸா, “எவருமே, முதலிடத்தில் தொடர்ந்தும் இருக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் இடம்பெறும் டபிள்யூ.டி.ஏ இறுதிப் போட்டிகள் தொடருக்காகச் சென்றுள்ள நிலையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு பிரிவிலும் உலகின் முன்னணி வீரர்கள் 8 பேர் கலந்துகொள்ளும் இத்தொடரில், இவ்வாண்டு ஆரம்பத்தில் முதலிடத்தில் இருந்தமையைத் தொடர்ந்து, சானியா மிர்ஸா – மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி, தகுதிபெற்றிருந்தது. அதன் பின்னர், இருவருமே பிரிந்து, புதிய ஜோடிகளோடு விளையாடுகின்ற போதிலும், இத்தொடருக்காக, மீண்டும் ஒன்றுசேர்ந்துள்ளனர்.
இத்தொடரில், சானியா மிர்ஸா – மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி வெற்றிபெறாவிட்டால், முதலிடத்தில் காணப்படும் சானியா, தனது முதலிடத்தை இழக்க வேண்டியேற்படும்.
இந்நிலையில் கருத்துத் தெரிவித்த சானியா, “எவருமே, தொடர்ந்தும் முதலிடத்தில் இருப்பதில்லை. கடந்தாண்டு ஏப்ரலில், முதலிடத்துக்கு நான் வந்த போது, அது மிகப் பெரியது. கனவொன்று நனவான சந்தர்ப்பம். தொடர்ந்து 80 வாரங்களுக்கு முதலிடத்தில் இருப்பேனென நான் எதிர்பார்த்திருக்கவில்லை. இது, மிகவும் அற்புதமான பயணமாகும்” என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், முதலிடத்தை இழந்தாலும் கூட, அது எதையும் மாற்றிவிடாது எனவும் தொடர்ந்தும் சிறப்பாக விளையாடவே எதிர்பார்ப்பார் எனவும் குறிப்பிட்டார்.
Related posts:
|
|