உலக சாதனையை படைத்த லசித் மாலிங்க!

Saturday, September 7th, 2019


நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் இலங்கை வீரர் லசித் மலிங்கா நான்கு பந்துகளில் 4 விக்கெட் சாய்த்து மிரட்டல் சாதனை படைத்துள்ளார்.

இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் மூன்றாவது போட்டி இலங்கையில் பல்லகலேவில் இன்று நடைபெற்றது.

இதில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 8 விக்கெட் இழப்புக்கு 125 ஓட்டங்கள் எடுத்தது. இதனையடுத்து, 126 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி விளையாடியது.

நியூசிலாந்து அணியில் கொலின் முன்ரோ, திம் செய்ஃபெர்ட் களமிறங்கினர். முதல் ஓவரை வீசிய மலிங்கா 3 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்தார்.

முன்ரோ இரண்டாவது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் விளாசினார். இரண்டு ஓவரில் அந்த அணி 15 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

இதனையடுத்து, ஆட்டத்தின் மூன்றாவது ஓவரை வீசிய மலிங்கா முன்ரோவை கிளீன் போல்ட் ஆக்கினார்.

இது டி20 கிரிக்கெட்டில் அவரது நூறாவது விக்கெட். அடுத்த மூன்று பந்துகளில் ருதர்போர்டு, கிரான்ஹோம், டெய்லர் ஆகியோரை டக் அவுட் ஆக்கினார்.

இதன் மூலம் நான்கு பந்துகளில் தொடர்ந்து 4 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார் லசித் மலிங்கா.

மீண்டும் ஐந்தாவது ஓவரில் செய்ஃபெர்ட்டையும் ஆட்டமிழக்க செய்தார். மலிங்கா 4 ஓவர்கள் வீசி 6 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் சாய்த்தார்.

இதனால் நியூசிலாந்து அணி 88 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது.

லசித் மலிங்கா இதற்கு முன்பாக, 2007 உலகக் கிண்ணம் தொடரின் தென்னாப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நான்கு பந்துகளில் 4 விக்கெட் சாய்த்திருந்தார். ஆப்கான் வீரர் ரஷித் கானும் டி20 போட்டியில் ஒருமுறை நான்கு பந்துகளில் 4 விக்கெட் எடுத்துள்ளார்.

சர்வதேசப் போட்டிகளில் மலிங்கா இதுவரை 5 முறை ஹாட்ரிக் விக்கெட் சாய்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: