உலக கிண்ண போட்டியில் பாகிஸ்தான் வரலாறு படைக்கும் – மொயின்கான் தெரிவிப்பு!

Friday, February 15th, 2019

உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் நாங்கள் இந்திய அணியை இதுவரை வீழ்த்தியது இல்லை. ஆனால் தற்போதைய பாகிஸ்தான் அணி வரும் உலக கிண்ண போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி வரலாறு படைக்கும். அந்த அளவுக்கு எங்கள் அணி வீரர்களிடம் திறமையும், நம்பிக்கையும் இருக்கிறது என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மொயின்கான் தெரிவித்துள்ளார்.

இதை ஏன் சொல்கிறேன் என்றால் இங்கிலாந்தில் 2 வருடத்திற்கு முன்பு நடந்த சாம்பியன்ஸ் கிண்ண போட்டியில் எங்கள் அணியினர் இந்திய அணியை வீழ்த்தினார்கள். இங்கிலாந்தில் ஜூன் மாதம் இருக்கும் சீதோஷ்ண நிலை வேகப்பந்து வீச்சுக்கு அனுகூலமாக இருக்கும். எங்கள் அணி வேகப்பந்து வீச்சில் சிறப்பாக இருக்கிறது.

கடந்த பல வருடங்களாக இங்கிலாந்து மண்ணில் பாகிஸ்தான் அணி நன்றாக செயல்பட்டு வருகிறது. மே, ஜூன் மாதங்களில் இங்கிலாந்தில் நிலவும் வானிலையை கணிக்க முடியாது. ஆடுகளம் ஈரப்பதம் கொண்டதாக இருக்கும். இவையெல்லாம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான அம்சமாகும்.

எங்கள் அணி வீரர்கள் நல்ல உத்வேகத்துடன் உள்ளனர். தென்ஆப்பிரிக்கா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி விட்டு நாங்கள் உலக கிண்ண போட்டிக்கு செல்வது நல்ல விஷயமாகும். தலைவர் சர்ப்ராஸ் அகமதுவை சிறுவயது முதல் எனக்கு தெரியும். தற்போது பாகிஸ்தான் அணியை வழிநடத்த அவரை விட சிறந்த வீரர் யாரும் இல்லை என மொயின்கான் கூறினார்.

உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் – இந்தியா அணிகள் இதுவரை 6 முறை சந்தித்துள்ளன. இதில் ஒரு முறை கூட பாகிஸ்தான் வென்றது இல்லை.

எதிர்வரும் உலக கிண்ண போட்டியில் பாகிஸ்தான் – இந்தியா அணிகள் ஜூன் 16 ஆம் திகதி லீக்கில் மோதுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: