உறுதியாக எதிர்க்கிறது பி.சி.சி.ஐ!

இரண்டு பிரிவுகளாக டெஸ்ட் போட்டிகளை மாற்றுவதற்கு, தனது எதிர்ப்பை மீளவும் உறுதிப்படுத்துவதாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் (பி.சி.சி.ஐ) தலைவர் அநுரக் தாக்கூர் தெரிவித்துள்ளார். சிறிய நாடுகளின் நன்மைக்காவே இதை எதிர்ப்பதாக, அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் சபையின் வருடாந்தக் கூட்டத்தில், இரண்டு பிரிவுகளாக டெஸ்ட் போட்டிகளை நடத்தும் திட்டம் முன்வைக்கப்பட்டது. இதற்கு, அவுஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் ஆதரவு வெளியிட்டிருந்தன. ஆனால், சிறிய நாடுகளான இலங்கையும் பங்களாதேஷும் இதற்கு எதிர்ப்பு வெளியிட்டிருந்தன. இந்நிலையிலேயே, உலகில் மிகவும் பலம்வாய்ந்த கிரிக்கெட் சபையான இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை, அந்தத் திட்டத்துக்கான எதிர்ப்பை வெளியிட்டுள்ளமை முக்கியமானதாக அமைந்துள்ளது.
“இரண்டு பிரிவு டெஸ்ட் கட்டமைப்புக்கு, பி.சி.சி.ஐ எதிர்ப்புத் தெரிவிக்கிறது. ஏனெனில், சிறிய நாடுகளுக்குப் பாதிப்பு ஏற்படும், எனவே அவர்கள் தொடர்பாகக் கவனமெடுக்க, பி.சி.சி.ஐ விரும்புகிறது. அவர்களது நலன்களைப் பாதுகாத்தல் அவசியமானது” என, அநுரக் தாக்கூர் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், “இரண்டு பிரிவு டெஸ்ட் போட்டிகளில், சிறிய நாடுகளுக்குப் பாதிப்பு அதிகம் ஏற்படும். வருமானம், முன்னிலை நாடுகளுக்கெதிராக விளையாடும் வாய்ப்பு ஆகியவற்றிலும் இழப்பு ஏற்படும். அது நடைபெற நாம் விரும்பவில்லை. உலக கிரிக்கெட்டின் சிறந்த நலன்களுக்கேற்றவாறு நாம் செயற்பட விரும்புகிறோம். அதன் காரணமாகவே, எல்லா நாடுகளுக்கும் எதிராகவும் எங்களுடைய அணி விளையாடுகிறது” என அவர் மேலும் குறிப்பிட்டார்.
Related posts:
|
|