இலங்கை 19 வயது அணியின் புதிய பயிற்சியாளராக ஹசன் திலகரத்னே !

Monday, June 4th, 2018

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹசன் திலகரத்னே, இலங்கை U19 அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்தில் நடைபெற்ற U19 உலகக் கிண்ண தொடரில், இலங்கை அணியின் ஆட்டம் மோசமாக இருந்தது. அதன் காரணமாக, அணியின் பயிற்சியாளராக செயல்பட்ட ராய் டயஸ் உடனான ஒப்பந்தத்தை இலங்கை கிரிக்கெட் வாரியம் நீட்டிக்க விரும்பவில்லை.

இந்நிலையில் இலங்கையின் முன்னாள் வீரரும், துடுப்பாட்ட பயிற்சியாளராக செயல்பட்டவருமான ஹசன் திலகரத்னே, U19 அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திலங்கா சுமதிபாலா தலைமையிலான நிர்வாகம், ஹசன் திலகரத்னேவை இரண்டு ஆண்டுகளுக்கு U19 அணியின் பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்துள்ளது. அவருக்கு மாத ஊதியமாக 5.50 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஹசன் திலகரத்னே இலங்கை டெஸ்ட் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக கடந்த 2017ஆம் ஆண்டு செயல்பட்டார். அப்போது இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இலங்கை அணி இழந்தது.

ஆனால், எந்த வெற்றியும் இல்லாமல் திலகரத்னே தனது பயிற்சியாளர் பதவியை நிலை நிறுத்திக் கொள்ளவே முற்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. மேலும், டி20 தொடரிலும் அவரின் பயிற்சி எந்த மாற்றத்தையும் கொண்டு வராததால், இலங்கை அணி அந்த தொடரையும் இழந்தது.

அதன் பின்னர், திலன் சமரவீராவை இலங்கை கிரிக்கெட் வாரியம் ஹசன் திலகரத்னேவுக்கு பதிலாக பயிற்சியாளராக நியமித்தது. இதனால், தற்போது இலங்கை U19 அணிக்கு ஹசன் திலகரத்னே பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.

Related posts: