இலங்கை ஹொக்கி அணி ஹொங் கொங் பயணம்!

Saturday, November 19th, 2016

ஹொங் கொங்கில் இன்று முதல் 27ஆம் திகதி வரை நடைபெறும் ஐந்தாவது ஆசிய ஹொக்கி சம்மேளன கிண்ணப் போட்டிகளில் பங்குகொள்வதற்காக இலங்கை ஆடவர் ஹொக்கி அணி பயணமானது

ஆசிய ஹொக்கி சம்மேளன கிண்ணப் போட்டிகள், ஆசியாவில் முக்கிய ஹொக்கி தொடராகக் கருதப்படும் ஆசிய கிண்ண சம்பியன்ஷிப் போட்டிகளுக்கான தகுதிகாண் சுற்றுப் போட்டியாகவும் உள்ளது. எனவே, இந்த சுற்றுப் போட்டியில் வெற்றி பெறும் அணிகள் குறித்த போட்டிகளுக்கு தகுதி பெறும் வாய்ப்பினை நேரடியாகப் பெறுகின்றன.

ஐந்தாவது ஆசிய ஹொக்கி சம்மேளன கிண்ணத் தொடரில் பங்குகொள்ளும் அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் இடம்பெறவுள்ளன. அதில் இலங்கை அணி ஏழு அணிகளுடன் போட்டியிட இருப்பதோடு, வலிமை மிக்க சிங்கப்பூர், சைனிஸ் தைபெய் மற்றும் ஹொங் கொங் ஆகிய அணிகள் இலங்கை அணிக்கு சவாலாக இருக்கும். அதேநேரம் தாய்லாந்து, உஸ்பெகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் மகாவோ ஆகிய நாடுகளே இத்தொடரில் போட்டியிடும் ஏனைய அணிகள் ஆகும்.

இலங்கை அணியை க்றிஸ்ட் ஷர்ச் பாடசாலை அணியின் முன்னாள் ஹொக்கி வீரர் நலந்த டி சில்வா வழி நடத்தவுள்ளார். ஏற்கனவே, கடந்த உலக கிண்ண லீக் போட்டிகளில் இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்த இலங்கை அணியை நலந்த டி சில்வா தலைமை தாங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

கடந்த உலக லீக் போட்டிகளில் அதி உச்ச திறமைகளை வெளிப்படுத்தி, அனைத்து ஹொக்கி ரசிகர்களையும் கவர்ந்த நிலையில் இம்முறையும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் நோக்கில் இலங்கை அணியினர் உள்ளனர். அத்துடன் கடந்த உலக லீக் போட்டிகளில் பங்குபற்றிய, அனுபவம் வாய்ந்த அணி எவ்விதமான மாற்றங்களும் இல்லாமல், முன்னாள் அணித்தலைவர் துஷித ரத்னசிறி மற்றும் சாந்தருவான் பிரியலங்க போன்ற சிறந்த வீரர்களுடன் இம்முறையும் காணப்படுகின்றது.

மேலும், மூத்த வீரரான முஹம்மத் முலபர் அணியின் முக்கிய வீரராக இருப்பதோடு மிக நீண்ட காலமாக இலங்கை தேசிய அணிக்காக விளையாடி வரும் அனுபவம் வாய்ந்த ஒருவராகவும் உள்ளார். 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆசிய ஹொக்கி போட்டிகளில் அவர் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தியதோடு பல கோல்களையும் அடித்திருந்தார்.

இலங்கை தேசிய ஹொக்கி அணியின் முன்னாள் வீரர் அனுராதா ஹேரத் பண்டார இந்த சுற்றுப் பயணத்துக்கு இலங்கை அணியின் பயிற்சியாளராக செயல்படுகின்றார். இம்முறை இலங்கை அணி இறுதிப் போட்டி வரை முன்னேற தகுதி வாய்ந்த அணியாக இருக்கிறது என அவர் நம்பிக்கை கொண்டுள்ளார். மாத்தளை க்றிஸ்ட் ஷர்ச் அணியின் முன்னாள் ஹொக்கி வீரர் பண்டார 2014ஆம் ஆண்டு முதல் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் அதே நேரம், உலக ஹொக்கி லீக் போட்டிகளின் போதும் பயிற்சியாளராக செயல்பட்டிருந்தார்.

இலங்கை ஹொக்கி அணி போதுமான பயிற்சிகளைப் பெற்றுள்ளது. எனினும், சர்வதேச அணிகளுடனான நட்பு ரீதியிலான போட்டிகளில் பங்கு கொண்டு போதுமான அளவு அனுபவங்களைப் பெறாமையே இலங்கை அணிக்கு இருக்கும் ஒரே கவலையகும்.

இலங்கை ஹொக்கி அணி

நலந்த டி சில்வா(அணித் தலைவர்), திசாநாயக்க(துணைத் தலைவர்), தூசித் ரத்னசிறி, தர்மரத்ன, இசங்க ஜயசுந்தர, சந்தருவான் பிரியலங்கா, மதுரங்க விஜேசிங்க, லஹிறு கிஹான் வீரசிங்க, தமித் மதுசங்க பண்டார, தரங்க குணவர்தன, லக்ஷான் நாணயக்கர, அசங்க வெளிகேடற, அமில தயான் ரத்னசிறி, சாமிக்க குணவர்தன, தறிந்து ஹென்தனிய, புஷ்பகுமார ஹென்தனிய, அனுராதா சுரேஷ், மொஹம்மத் முலபர்.

அணி முகாமையாளர் – தமர லியனகே

பயிற்சியாளர் – அனுராதா ஹேரத் பண்டார

அணியின் துணைப் பயிற்சியாளர் – ஷம்மிக்க லனரோல்

colsrilanka-ahf-696x521103827263_5022698_18112016_aff_cmy

Related posts: