இலங்கை பெண்களை வெள்ளையடித்தது ஆஸி!

இலங்கை – அவுஸ்திரேலியப் பெண்கள் அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் நான்காவது போட்டியிலும் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி, இலங்கையை வெள்ளையடிப்புச் செய்துள்ளது.
கொழும்பு கெத்தாராம விளையாட்டரங்கில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
இதன்படி துடுப்பெடுத்தாடிய அவ்வணி, 50 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 268 ஓட்டங்களைக் குவித்தது. முதலாவது விக்கெட்டுக்காக 11 ஓவர்களில் 48 ஓட்டங்களைப் பகிர்ந்த அவ்வணி, அதன் பின்னர் தொடர்ச்சியாகச் சிறந்த இணைப்பாட்டங்களைப் பகிர்ந்தது. துடுப்பாட்டத்தில் நிக்கோல் போல்ட்டன் 113 (146), எலைஸ் பெரி ஆட்டமிழக்காமல் 77 (77), மெக் லெனிங் 43 (44) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் சாமரி அத்தப்பத்து 2 விக்கெட்டுகளையும் அமா காஞ்சனா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
269 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 45.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 131 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுத் தோல்வியடைந்தது. ஒரு கட்டத்தில் 15 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 69 ஓட்டங்களுடன் காணப்பட்ட இலங்கை, அதன் பின்னர் விக்கெட்டுகளை இழந்து படுதோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில் பிரசாதனி வீரக்கொடி 33 (57), சாமரி அத்தப்பத்து 26 (39), சாமரி பொல்கம்பொல 19 (60) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் கிறிஸ்டன் பீம்ஸ் 4, றெறே ஃபரல் 3, ஹோலி பேர்லிங் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
Related posts:
|
|