இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் பொருளாளர் பதவிக்கு போட்டியின்றி தெரிவாகவிருந்த வாய்ப்பை ஓரிரவில் இல்லாமல் செய்தது தேர்தல் குழு – அனுர டி சில்வா குற்றச்சாட்டு!

Monday, January 9th, 2023

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் நிருவாக சபைத் தேர்தலில் பொருளாளர் பதவிக்கு போட்டியின்றி தெரிவாகவிருந்த ரீ. சுதாகருக்கு ஓரே இரவில் போட்டியை ஏற்படுத்தும் வகையில் மற்றொருவரின் பெயரை வேட்பு மனு பட்டியலில்  தேர்தல் குழு  சேர்த்தமை வியப்பை தோற்றுவித்துள்ளதாக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் அநுர டி சில்வா தெரிவித்தார்.

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் நியதியிலிருந்த 1,277,500,000 ரூபாவுக்கு என்ன நேர்ந்தது என்ற தலைப்பில் அண்மையில் நடத்திய ஊடக சந்திப்பின்போது இதனைக் குறிப்பிட்ட  அநுர டி சில்வா, ஓய்வுநிலை நீதிபதி தலைமையிலான தேர்தல் குழு பக்கசார்பாக செயற்படுகின்றதோ என்ற சந்தேகத்தை எழுப்புவதாகவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அநுர டி சில்வா, ‘இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தேர்தலை முன்னிட்டு கடந்த டிசம்பர் 20ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களின் பிரகாரம் பொருளாளர் பதவிக்கு சில வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. நவம்பர் 21ஆம் திகதி ஆட்சேபனைகள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் நவம்பர் 22ஆம் திகதி தேர்தல் குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, ஏற்றுக்கொள்ளப்படாத வேட்பு மனுக்கள் அடங்கிய பட்டியல்   வெளியிடபட்டது.

‘அதற்கு அமைய பொருளாளர் பதவிக்கு ரி. சுதாகரின் வேட்பு மனு மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்பட்டதாக ஓய்வுநிலை நீதிபதி கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத் தலைமையிலான மூவரடங்கிய தேர்தல் குழு உறுப்பினர்கள் கையொப்பமிட்டு வெளியிட்ட வேட்பு மனு பட்டியலில் காணப்பட்டது. அதன்படி ரீ. சுதாகர் போட்டியின்றி தெரிவு செய்யப்படுவதாக இருந்தது. ஆனால், 24 மணித்தியாலம் கழித்து பொருளாளர் பதவிக்கு மற்றொரு வேட்பாளரின் பெயரை சேர்த்து புதிதாக ஒரு வேட்பு மனு பட்டியலை  தேர்தல் குழு   வெளியிட்டது. இது தேர்தல் குழுவின் நேர்மைத்துவத்தை கேள்விக்குறியாக்குவதாக அமைகிறது’ என அநுர டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: