இலங்கை அணி படு தோல்வி – டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து!

Tuesday, May 31st, 2016

இலங்கை அணிக்கெதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.

இங்கிலாந்து- இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி செஸ்டர்-லீ-ஸ்டிரிட்டில் நடந்தது.

இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி மொயீன் அலி (155), ஹால்ஸ்(83), ரூட் (80) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 9 விக்கெட்டுக்கு 498 ஓட்டங்கள் எடுத்து ’டிக்ளேர்’ செய்தது.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி மோசமாக துடுப்பெடுத்தாடியது. இதனால் 101 ஓட்டங்களுக்கு சுருண்டு “பாலோ- ஆன்” பெற்றது.

“பாலோ- ஆன்” பெற்ற இலங்கை அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்கள் கருணாரத்னே (26), சில்வா (60) நல்ல தொடக்கம் கொடுத்தனர். அடுத்து வந்த மெண்டிஸ் (26), திரிமன்னே (13) நிலைக்கவில்லை.

அணித்தலைவர் மேத்யூஸ் (80) அரைசதம் கடந்து நம்பிக்கை அளித்தார். சந்திமால் தன் பங்கிற்கு அரைசதம் விளாசினார். 3வது நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்கு 309 ஓட்டங்கள் எடுத்தது.

சந்திமால் 54 ஓட்டங்களுடனும், சிறிவர்த்தனே 35 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இன்று தொடர்ந்து சிறப்பாக ஆடிய சந்திமால் சதம் விளாசினார். அவர் 126 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஹேராத் 61 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.

இதனால் இலங்கை அணி 2வது இன்னிங்சில் 475 ஓட்டங்கள் எடுத்தது. முதல் இன்னிங்சில் 101 ஓட்டங்களுக்கு சுருண்டதால் 78 ஓட்டங்களே முன்னிலை பெற்றது.

இதைத் தொடர்ந்து 79 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இங்கிலாந்து அணி 1 விக்கெட் மட்டும் இழந்து வெற்றி பெற்றது. அணித்தலைவர் குக் (47), காம்டன் (22) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்தப் போட்டியில் 8 விக்கெட்டுகளை வீழ்த்திய இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்து அணி 2-0 என கைப்பற்றியுள்ளது.

Related posts: