இலங்கை அணி இன்னிங்ஸ், 280 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி!

Tuesday, April 18th, 2023

சுற்றுலா அயர்லாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 280 ஓட்டங்கள் மற்றும் ஒரு இன்னிங்ஸினால் வெற்றிபெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய இலங்கை அணி, 6 விக்கெட்டுகளை இழந்து 591 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் இன்னிங்ஸை முடிவுக்கு கொண்டுவந்தது.

இந்த இன்னிங்ஸில் இலங்கை அணியின் நான்கு வீரர்கள் சதம் கடந்தனர். அதன்படி, திமுத் கருணாரத்ன 179 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 140 ஓட்டங்களையும், தினேஷ் சந்திமால் 102 ஓட்டங்களையும், சதீர சமரவிக்ரம 104 ஓட்டங்களையும் பெற்றனர்.

இந்தநிலையில், தமது முதலாவது இன்னிங்ஸில் பதிலளித்தாடிய அயர்லாந்து அணி மூன்றாம் நாளான இன்று 143 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இதில், இலங்கை அணியின் ரமேஷ் மெண்டிஸ் 52 ஓட்டங்களை கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்தநிலையில், 448 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி, ஃப்ளோ வன் முறையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த அயர்லாந்து அணி, 168 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து போட்டியில் தோல்வியை தழுவியது.

துடுப்பாட்டத்தில் ஹெரி டெக்டர் 42 ஓட்டங்களை அணிசார்பில் அதிகபடியாக பெற்றார். பந்துவீச்சில் ரமேஸ் மெண்டிஸ் 4 விக்கெட்டுகளையும், பிரபாத் ஜயசூரிய 3 விக்கெட்டுகளையும் விஷ்வ பெர்னாண்டோ 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

ஆட்டநாயனுக்கான விருதை பிரபாத் ஜயசூரிய (மொத்தமாக 10 விக்கெட்டுகள்) பெற்றார். இந்தநிலையில், இரண்டு போட்டிகளைக் கொண்ட தொடரில் இலங்கை அணி 1 – 0 என்ற அடிப்படையில் முன்னிலை வகிக்கிறது.

இதேவேளை, இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 24 ஆம் திகதி காலியில் ஆரம்பமாகவுள்ளது.

000

Related posts: