இலங்கை அணியை வெள்ளையடித்தது தென் ஆப்பிரிக்கா!

Sunday, March 17th, 2019

கேப்டவுனில் நடந்த 5வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி இலங்கையை வீழ்த்தி ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது.

இலங்கை-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 5வது ஒருநாள் போட்டி கேப்டவுனில் நடந்தது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

தொடக்க வீரர்கள் சொதப்பிய நிலையில், குசால் மெண்டிஸ் நிதானமாக விளையாடி அரைசதம்(56) அடித்தார். எனினும் இலங்கை அணியின் விக்கெட்டுகள் தொடர்ந்து சரிந்தன.

ஏஞ்சலோ பெரேரா 31 ஓட்டங்களும், பிரியாமல் பெரேரா 33 ஓட்டங்களும், உதானா 32 ஓட்டங்களும் எடுத்தனர். ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் அவுட் ஆனதால் இலங்கை அணி 49.3 ஓவர்களில் 225 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ரபாடா 3 விக்கெட்டுகளும், ஆன்ரிச் மற்றும் தாஹிர் இருவரும் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். பின்னர் தென் ஆப்பிரிக்க அணி களமிறங்கியது.

அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 135 ஓட்டங்கள் எடுத்திருந்தது. அப்போது மின் விளக்கில் கோளாறு ஏற்பட்டது. அந்த பிரச்சனை சரியாகாததால் ஆட்டம் அத்துடன் நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, டக்வொர்த் லீவிஸ் முறைப்படி தென் ஆப்பிரிக்க அணி 28 ஓவர்களில் 95 ஓட்டங்கள் எடுத்தாலே வெற்றி என்ற நிலையில், அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 135 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக மார்க்கிராம் 67 ஓட்டங்கள் எடுத்து களத்தில் இருந்தார். இலங்கை அணி தரப்பில் மலிங்கா, திசாரா பெரேரா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை முழுவதுமாக கைப்பற்றி, இலங்கை அணியை ஒயிட்வாஷ் செய்தது.

இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் வரும் 19ஆம் திகதி தொடங்குகிறது.

Related posts: