இலங்கை அணியில் தொடர்கதையான உபாதை!

Wednesday, December 13th, 2017

இந்திய அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சதமடித்து போட்டியை சமப்படுத்த உதவிய தனஞ்சய டி சில்வா ஒருநாள் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடர் நிறைவடைந்த நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணி விளையாடிவருகின்றது. நீண்ட இடைவேளைக்கு பிறகு தனஞ்சய டி சில்வா மீண்டும் ஒருநாள் குழாமுக்குள் உள்வாங்கப்பட்டிருந்தார்.

எனினும் இந்திய அணிக்கெதிரான 3வது டெஸ்ட் போட்டியில் தனஞ்சயவின் தொடைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது.

இதனை கருத்திற்கொண்டு அவர் 119 ஓட்டங்களை பெற்றிருந்த போது போட்டியின் இடைநடுவில்  ஆடுகளம் விட்டகன்றிருந்தார். உபாதை காரணமாக இந்திய அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் பங்குகொள்ளவில்லை.

இந்நிலையில் தனஞ்சய  டி சில்வா உபாதையிலிருந்து மீள முடியாத சூழ்நிலைக்கு ஆளாகியிருப்பதால் ஒருநாள் தொடரில் முற்றுமுழுதாக வெளியேற்றப்பட்டுள்ளார்.

டெஸ்ட் தொடரில் இலங்கைக்கு வலுச்சேர்த்த தன்ஞ்சய ஒருநாள் மற்றும் ரீ20 தொடர்களிலும் தனது சகலதுறை திறமையை வெளிக்காட்டி இலங்கை அணியை வழிநடாத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட இரசிகர் பட்டாளத்திற்கு இந்த செய்தி அதிர்ச்சியளித்துள்ளது

இரு அணிகளுக்குமிடையான ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி நாளை மொஹாலியில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. தனஞ்சவுக்கு மாற்றீடாக யாரை இணைப்பது என்கின்ற தகவல் இதுவரை அறிவிக்கப்படவில்லை. நாளைய போட்டியில் இலங்கை அணி சில மாற்றங்களோடு விளையாடுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts: