இலங்கை அணியின் ஒவ்வொரு வீரருக்கும் தனிப்பட்ட முறையில் உளவியல் பயிற்சி!

Friday, April 27th, 2018

கடந்த ஜனவரி மாதம் இலங்கை கிரிக்கெட் அணியுடன் பணி புரிந்த அவுஸ்திரேலியாவின் செயல்திறன் உளவியலாளரான கலாநிதி பில் ஜோன்சி (Phil Jauncey) எதிர்வரும் மே மாதம் இலங்கைதேசிய கிரிக்கெட் அணியுடன் மற்றுமொரு அமர்வில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜோன்சி இலங்கை அணியுடன் முதல் முறை பணிபுரிந்தபோது, ஒவ்வொரு வீரர் மற்றும் பயிற்சியாளர்களுக்குமான பொருத்தமான சிறந்த தொடர்பாடல் மற்றும் கற்றல் முறையை கொண்டுஒவ்வொரு வீரரதும் ஆளுமை பண்புகளை அடையாளம் கண்டார்.

அவர் எதிர்வரும் மே 05 தொடக்கம் 23ஆம் திகதி வரை தேசிய அணிக்கு மீண்டும் ஆலோசனைகளை வழங்கவுள்ளார். இம்முறை அவர் தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு வீரருக்கும் உயர்மட்டத்தில் தொடர்ச்சியாக திறமையை வெளிப்படுத்துவதற்கு உதவி புரியவுள்ளார்.

‘வீரர்களின் கற்கும் பாணியை புரிந்து கொள்வது மற்றும் அவர்களின் திறமையை வெளிப்படுத்த தூண்டுவதற்கு பயிற்சியாளர்களுடன் நான் தொடர்ந்து பணியாற்றவுள்ளேன்’ என ஜோன்சிகுறிப்பிட்டார்.

மேலும் ஆலோசனை மற்றும் கல்வி உளவியல் பற்றி முதுநிலை மற்றும் கலாநிதி பட்டம் பெற்றிருக்கும் ஜோன்சி, மௌண்ட் கிரவட் CAE (தற்போது கிரிப்பித் பல்கலைக்கழகம்), QUT மற்றும் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகங்களில், கல்வி உளவியல், சமூக உளவியல், மேம்பாட்டு உளவியல், ஆலோசனை வழங்கல், சந்தைப்படுத்தல் மற்றும் பல்கலாசார உளவியல் ஆகிய துறைகளில்விரிவுரையாளராக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: