இறுதிப்போட்டியிலும் மண் கவ்விய இங்கிலாந்து அணி!

இங்கிலாந்து அணிக்கெதிரான ஏஷஷ் தொடரின் 5வது போட்டியில், இன்னிங்ஸ் மற்றும் 123 ஓட்டங்களால் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி ஏஷஷ் தொடரை 4-0 என கைப்பற்றியது.
போட்டியின் 5வது நாளான இன்று இரண்டாவது இன்னிங்ஸில் ஆடிய இங்கிலாந்து அணி சகல விக்கட்டுகளையும் இழந்து வெறும் 180 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 346 ஓட்டங்களை பெற்றது. இதில் ரூட் 83 ஓட்டங்களையும்,டேவிட் மலன் 62 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுக்க, அவுஸ்திரேலிய அணிசார்பில் கம்மின்ஸ் 4 விக்கட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் தங்களது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி, உஷ்மான் கவாஜா, ஷோர்ன் மார்ஷ் மற்றும் மிச்சல் மார்ஷ் ஆகியோரின் அபார சதத்தின் உதவியுடன் 7 விக்கட்டுகளை இழந்து 649 ஓட்டங்களை பெற்றிருந்த போது, ஆட்டத்தை இடைநிறுத்தியது. அவுஸ்திரேலிய அணி சார்பில் உஷ்மான் கவாஜா 171 ஓட்டங்கள், ஷோர்ன் மார்ஷ் 156 ஓட்டங்கள் மற்றும் மிச்சல் மார்ஷ் 101 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர். இங்கிலாந்து அணி சார்பில் மொஹீன் அலி 2 விக்கட்டுகளை வீழ்த்தினார்.
303 ஓட்டங்கள் பின்னடைவில் தங்களது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணி சீரான இடைவேளைகளில் விக்கட்டுகளை பறிகொடுத்து, 180 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டு, இன்னிங்ஸ் மற்றும் 123 ஓட்டங்களால் படுதோல்வியடைந்தது.
இங்கிலாந்து அணிசார்பில் அணித்தலைவர் ஜோ ரூட் 58 ஓட்டங்களை பெற்றிருந்த போது, சுகயீனம் காரணமாக மைதானத்தை விட்டு வெளியேற, ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் பெவிலியன் திரும்பினர்.
அவுஸ்திரேலிய அணிசார்பில் கம்மின்ஸ் 4 விக்கட்டுகளையும், நெதன் லையன் 3 விக்கட்டுகளையும் வீழ்த்தினர்.
போட்டியின் சிறப்பாட்டக்காரராக பெட் கம்மின்ஸஸ் தெரிவுசெ்யப்பட்டதுடன், தொடராட்ட நாயகனாக அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவுசெய்யப்பட்டார்.
Related posts:
|
|