இருவரின்  பெறுமதியான இரு இரட்டைச் சதங்கள்!

Monday, July 25th, 2016

டெஸ்ட் போட்டிகளை ஆழமாக இரசிக்கும் இரசிகர்களுக்கு, மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் இந்திய அணிக்குமிடையிலான போட்டியும், இங்கிலாந்து அணிக்கும் பாகிஸ்தான் அணிக்குமிடையிலான போட்டியும் விருந்தாகவே அமைந்துள்ளன. அதில் முக்கியமாக, இரு அணிகளையும் சேர்ந்த உயர்தரமிக்க துடுப்பாட்ட வீரர்களான விராத் கோலி, ஜோ றூட் இருவரும், இரட்டைச் சதங்களைப் பெற்றுக் கொண்டமை, இன்னமும் விருந்தாக அமைந்து கொண்டது.

21ஆம் திகதி ஆரம்பித்த டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில், தனது முதலாவது இரட்டைச் சதத்தைப் பூர்த்திசெய்த விராத் கோலி, வெளிநாடொன்றில் வைத்து இரட்டைச் சதம் பெற்ற முதலாவது இந்திய அணித் தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். இதற்கு முன்னர் அதிகபட்ச ஓட்டங்களாக, மொஹமட் அஸாருதின், 1990ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கெதிராகப் பெற்ற 192 ஓட்டங்களே காணப்பட்டன.

அதைவிட முக்கியமாக, தனது டெஸ்ட் அறிமுகத்தை விராத் கோலி மேற்கொண்டது, இதே கரீபியன் தீவுகளில் தான். 3 டெஸ்ட் போட்டிகளில் 5 இனிங்ஸ்களில் துடுப்பெடுத்தாடிய விராத் கோலி, 30 என்ற அதிகபட்ச ஓட்டங்களோடு, 76 ஓட்டங்களை 15.20 என்ற சராசரியில் பெற்றார். ஆகவே, அறிமுகத்தில் விட்டதை, அணித்தலைவராகப் பிடித்துள்ளார் கோலி.

மறுபக்கமாக ஜோ றூட், டெஸ்ட் வீரராகத் தன்னை நிலைநிறுத்தி, இதற்கு முன்னர் இரட்டைச் சதமொன்றையும் பெற்ற போதிலும், 22ஆம் திகதி ஆரம்பித்த போட்டியின் 2ஆவது நாளில் அவர் பெற்ற இரட்டைச் சதம், அவருக்கு முக்கியமானதாக அமைந்தது.

அவரது இறுதி 4 டெஸ்ட்களில், ஒரேயோர் அரைச்சதம் உள்ளடங்கலாக, 24 என்ற சராசரியிலேயே ஓட்டங்களைப் பெற்றிருந்தார் றூட்.

அத்துடன் இறுதி 12 டெஸ்ட்களில் ஒரேயொரு சதத்தை மாத்திரமே பெற்றிருந்தார். உயர்வான பெறுபேறுகளை வெளிப்படுத்துவதற்குப் பெயர்போன றூட்டுக்கு, இந்தப் பெறுபேறுகள் போதாமலேயே இருந்தன. அதற்குப் பதிலாகவே, அவர் பெற்ற 254 ஓட்டங்கள் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: